Published : 08 Aug 2023 04:03 PM
Last Updated : 08 Aug 2023 04:03 PM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் அருகருகே யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் அமைந்திருந் ததையும் அக்காலத்தில் நிலவிய மத நல்லிணக்கத்தையும் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
ராமநாதபுரம் அருகே வாலாந்தர வையைச் சேர்ந்த சிவத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு கிணறு அமைக்க கடற்கரை பாறைக் கற்களை அருகிலுள்ள பெரியபட்டினத்திலிருந்து வாங்கி வந்தார். அதனுடன் கல்வெட்டு ஒன்றும் இருந்தது. அதன் அருமையை அறியாத அவர் கிணற்றடியில் கிடத்தி துணி துவைக்கப் பயன்படுத்தி வந்தார்.
இது குறித்து அறிந்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அதை படி எடுத்து ஆய்வுசெய்த பின் அவர் கூறியதாவது: சைவ மற்றும் வைணவக் கோயில்கள் தவிர்த்த பிற மத வழிபாட்டுத் தலங்கள் பள்ளி என்று அழைக்கப்படும். ஸ்வஸ்தி ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டில் சூதப்பள்ளியான ஐந்நூற்றுவன் பெரும் பள்ளிக் குத்தானமாக வழங்கப்பட்ட காணியாவதுக்கு (உரிமை நிலத்தின்) எல்லை சொல்லும் போது, அங்கிருந்த பள்ளிகள், நிலங்கள், தோட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன.
கிழக்கு எல்லையில் வளைச்சேரி, முடுக்கு வழி சொல்லப்படுகிறது. தெற்கு எல்லையில் திருமுதுச் சோழச்சிலை செட்டியார், பதிநெண்பூமி செயபாலன், கூத்தன் தேவனார் ஆகியோரின் தோட்டங்களும், மேற்கு எல்லையில் நாலு நாட்டாநி சோணச்சந்தி, ஸ்ரீசோழப் பெருந்தெரு, தரிசப் பள்ளி மதிளி, பிழார் பள்ளி ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
இங்கு நானாதேசி (நாலு நாட்டாநி), பதிநெண்பூமி, ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக் குழுக்களுக்குச் சொந்தமான இடங்கள், தோட்டங்கள் இருந்துள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதை கி.பி.1200-1250-க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம். பெரியபட்டினத்தில் சூதபள்ளி, தரிசப்பள்ளி, பிழார்பள்ளி ஆகிய பள்ளிகள் அருகருகே இருந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சூதப் பள்ளி என்பது யூதர்களின் பள்ளி ஆகும். ஐந்நூற்றுவர் எனும் வணிகக் குழுவினர் பெரியபட்டினத்தில் இருந்த யூதர்களின் பள்ளிக்கு நில தானம் கொடுத்துள்ளனர். பெரியபட்டினத்தில் இருந்த மரியம் என்ற யூதப் பெண்ணின் ஹீப்ரு மொழி கல்லறைக் கல்வெட்டு மத்திய தொல்லியல் துறையின் 1946-47-ம் ஆண்டறிக்கையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசப்பள்ளி பெரியபட்டினத்தில் இருந்த சிரியன் கிறித்துவப் பள்ளி ஆகும். அதேபோல் பிழார்பள்ளி என்பது ஜலால் ஜமால் என்ற முஸ்லிம் பள்ளி ஆகும். இந்த பிழார்பள்ளிக்கு மாறவர்மன் சுந்தரபாண்டியன் கொடை அளித் தது தொடர்பான கல்வெட்டு தற்போதும் திருப்புல்லாணி கோயிலில் உள்ளது.
பெரியபட்டினத்தில் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் வழி பாட்டுத் தலங்கள் அருகருகே அமைந்திருந்ததையும், அக்காலத்தில் நிலவிய மத நல்லிணக் கத்தையும் இந்த 13-ம் நூற்றாண்டு கல்வெட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கல்வெட்டு பொது மக்களின் பார்வைக்கு ராமநா தபுரம் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT