Published : 08 Aug 2023 03:30 AM
Last Updated : 08 Aug 2023 03:30 AM

உலகத் தரத்தில் தயாராகும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் - பொங்கல் பண்டிகை முதல் போட்டிகளை நடத்த திட்டம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாட்களில் தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு கோலாகமாக நடக்கிறது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை. தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு. இந்த மூன்று போட்டிகளையும் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முதல் உள்ளூர் பார்வையாளர்கள் வரை மதுரை மாவட்டத்தின் இந்த கிராமங்களுக்கு போட்டி நடக்கும் நாட்களில் திரள்வார்கள். ஆனால், போட்டிகள் நடக்கும் இடம் மிக குறுகலான இடமாக இருப்பதால் போதிய இடவசதி இல்லாமல் ஏராளமான பார்வையாளர்கள் போட்டியை காண வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வார்கள்.

குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முந்தைய நாள் இரவே சென்றாலும் பார்க்க இடம் கிடைப்பதில்லை. விஐபிகளும், உள்ளூர் பார்வையாளர்களும் மட்டுமே பார்க்க முடிகிறது. அதனால், மதுரை ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து தரப்பினரும் பார்க்க வசதி ஏற்படுத்தும் வகையில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு சின்னமாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தற்போது ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்க்கும் வகையில் கிரிக்கெட் மைதானம் போல் உலக தரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் கட்டப்படுகிறது. அலங்காநல்லூரில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தாலும் மற்றொரு நாளில் கீழக்கரையில் தற்போது கட்டப்படும் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமில்லாது, பண்பாடு மற்றும் கலாச்சார விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கால்நடை சந்தை போன்றவற்றை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய், மைதானம் பராமரிப்புக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தை சுற்றுலாத் துறை மூலம் ஒரு பண்பாட்டு வளாகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைதானம் கட்டி முடித்ததும், அதனை நிர்வகிக்க விளையாட்டு மைதானங்களை நிர்வப்பதில் நல்ல அனுபவம் பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக் கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மாடுபிடி வீரர்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை அமைய இருக்கிறது. இந்த மைதானத்திற்கு நுழைவாயில் வளைவு, காளைகள் சிற்பக்கூடம், உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை அமைய இருக்கிறது. அலங்காநல்லூரில் இருந்து இந்த மைதானத்திற்கு பார்வையார்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x