Published : 17 Nov 2017 09:24 AM
Last Updated : 17 Nov 2017 09:24 AM
ந
வம்பர் மாத அடைமழை என்றாலே பள்ளிக் குழந்தைகளுக்கு ஜாலிதான். விடுமுறை கிடைத்துவிடும். ஆனால், கல்லூரி மாணவர்களுக்கோ மழை விடுமுறை ரொம்பவே சலிப்பைத் தரும். சிறகுகள் விரித்துப் பறக்கும் கல்லூரி மாணவர்களை மழை விடுமுறை ஒரே இடத்தில் முடக்கிப்போட்டுவிடும். ஆனாலும், அடாத மழையிலும் விடாமல் ரவுண்டு அடிக்கும் மாணவ மாணவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிலர் வேறு வகையில் மழை விடுமுறையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அடிக்கடி மழை விடுமுறையை அனுபவிக்கும் சென்னையைச் சேர்ந்த சில கல்லூரி மாணவர்களிடம் மழை விடுமுறையைப் பற்றிக் கேட்டோம். சும்மா சொல்லக் கூடாது. மழை விடுமுறையை நன்றாகவே அனுபவிக்கிறார்கள்.
மெரினாவில் விளையாட்டு
“எனக்கு மழைக் காலம் ரொம்பப் பிடிக்கும். வீட்டுல கண்டிப்பா இருக்கவே மாட்டேன். நண்பர்களோடு சேர்ந்து சுத்தப் போயிடுவேன். நியூஸ் பார்த்துட்டு மழையில அதிகமா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத்தான் நாங்க போவோம். மெரினா பீச் போய் மழையில நனைந்து ஜாலியா விளையாடுவோம். எங்கேயுமே போக முடியவில்லையென்றால், நல்லா சாப்பிட்டுவிட்டு கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடுவேன்” என்கிறார் ஏ.எம். ஜெயின் கல்லூரி மாணவர் கிஷோர்.
நாவல் படிக்கும் காலம்
“மழையில் வெளியே போக முடியாதப்ப கம்ப்யூட்டர்ல ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். சில சமயம் புத்தகத்துல படிச்சுப் பார்த்த சமையலை செஞ்சி சாப்பிட்டு மழை விடுமுறையை ஜாலியா கொண்டாடுவேன்” என்கிறார் மாணவர் லோகேஷ் குமார். இவர்கள் இருவரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கிறார்கள்.
உதவும் மனசு
“எவ்ளோ மழை பெய்தாலும் எனக்குத் தூரமா டிரைவ் போகணும். இல்லைனா ஒரு குடையைப் புடிச்சிகிட்டுக் கிளம்பிடுவேன். மழையை வெளியே போய் ரசிக்கணும். கண்டிப்பா வீட்டுல இருக்க பிடிக்காது. பக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி இருந்துச்சுனா, அங்க மக்களுக்கு உதவ நண்பர்களோடு கிளம்பிடுவேன்.
நாம நல்லா பாதுகாப்பான இடத்துல இருக்கறப்போ வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுறதுதானே மனிதநேயம்” என்று சொல்கிறார் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவி ஹதீஜா ஆரிஃபா.
கவிதை கொட்டும்
“எனக்கு கவிதை எழுத ரொம்பப் பிடிக்கும். மழை பெய்ய ஆரம்பிச்சா வீட்டு ஜன்னல் ஓரத்திலே உட்கார்ந்துடுவேன். மழையை ரசிச்சிட்டு இருப்பேன். அப்புறமென்ன, கவிதை தானா கொட்ட ஆரம்பிச்சுடும். அப்புறம், மழை தண்ணீரைப் பார்த்ததும் மழலையாவே மாறிடுவேன்.
அக்கம்பக்கத்தில் உள்ள குட்டீஸ்களோடு சேர்ந்து காகித கப்பல் விட்டு ரசிப்பேன்.
இது மாதிரி விஷயங்களுக்காக மழை நிக்கக் கூடாதுன்னு நினைக்கிறப்பவே, மழை நிக்குறப்பதான் மனசு வாடி வதங்கிடும்” என்கிறார் மழைக் காதலியான எத்திராஜ் கல்லூரி மாணவி பூஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment