Published : 06 Aug 2023 03:23 PM
Last Updated : 06 Aug 2023 03:23 PM
மதுரை: மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பில் சமீபத்தில் நடந்த நடுகல் கண்காட்சியில் நன்றி மறவாத நாய்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வைத்த நடுகல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிடித்தமான இந்த கல்வெட்டு, மாணவர் களையும் வெகுவாக கவர்ந்தது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். ஒரு விலங்கு இன்னொரு விலங்குக்கு நன்றியு டையதாக இருக்கிறது என்றால் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திருண்ணாமலை அருகே எடுத்தனூரில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாய் இடம்பெற்ற நடுகல் ஆகும்.
இக்கல்வெட்டு முன்னாள் முதல்வர் கரு ணாநிதிக்கு மிகவும் பிடித்தமான கல்வெட்டு என்பது ஆச்சரியமான தகவல். தமிழ்நாடு தொல்லியல் துறையின் கல் வெட்டியல் எனும் இதழில் 1974 ஏப்ரல் 14- ல் ‘என்னைக் கவர்ந்த கல்வெட்டு’ எனும் தலைப்பில் முதல் கட்டுரையாக கருணாநிதி எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.
இது குறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருது பாண்டியன் கூறியதாவது: சங்க இலக்கியங்களில் காட்டு விலங்கான நாய்கள் பற்றிய குறிப்பு செழுமையாக உள்ளது. மனிதன் காடுகளில் அலைந்து வேட்டையாடும்போது பழக்கப்படுத்தப்பட்ட நாய் களையும் அழைத்துச் சென்றுள்ளான் என்று சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
உதாரணமாக வேங்கடத்துக்கு அப்பால், வடக்கே இருந்த வடுகர் எனும் சாதியார் வேட்டையாடும் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனர். அதன் பொருட்டு நாய் களையும் உடன் கொண்டு வருவர். சங்க இலக்கியமானது இவர்களை வம்பவடுகர் என்று குறுந்தொகை (குல்லைக் கண்ணி வடுகர் முனையது) பாடலில் உரைக்கிறது. இதேபோல் பிரிதொரு சங்க இலக்கியத்தில் கதநாய் வடுகர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வேட்டையின் போது குறிப்பாக பன்றி, முயல் போன்ற சிறிய விலங்குகளை பிடிக்க நாய்களை பயன்படுத்தி உள்ளதாக நற்றிணை நூல் குறிப்பிடுகிறது. கி.பி.624 -ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், எடுத்தனூர் எனும் ஊரில் ஆனிரை மீட்கும் போதோ, கவரும் போதோ நடந்த சண்டையில் இறந்த வீரனுக்கும், அவனுடன் காவலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாய்க்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
அக்கல்வெட்டானது வட்டெழுத்தில் எழுதப் பட்டுள்ளது. ஒரே நடுகல்லில் இரண்டு கல்வெட்டுகள். ஒரு பகுதியில் வீரனின் தோற்றமும், மற்றொரு பகுதியில் நாயின் தோற்றமும் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவ்விரண்டு கல் வெட்டுகளில் முதல் கல் வெட்டானது கருந் தேவகத்தி எனும் வீரன் இறந்த செய்தியும், மற் றொரு கல்வெட்டில் நாய் இறந்த விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாயின் பெயர் ‘கோவிவன் என்னும் நாய் ஒரு கள்ளனைக் கடித்து காத்திருந் தவாறுனைக் கடித்து காத்திருந்தவாறு’ என்று எழுதப்பட்டுள்ளது. நாய்களை வீட்டு விலங்காக பயன்படுத்தும் மரபு சங்ககாலம் தொட்டு இன்று வரை சமூகத்தில் நிலவிவருவது ஆச்சரியமான ஒன்றா கும். ஆகவேதான், இந்நடுகல்லை பற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் கைப்பட ‘என்னைக் கவர்ந்த கல்வெட்டு’ எனும் தலைப் பில் கட்டுரை எழுதியுள்ளார்.
இந்த கல்வெட்டு உள்பட 69 வகையான கல்வெட்டுகள், கலைஞர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை 3,696 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதில் கருணாநிதியை கவர்ந்த கல்வெட்டு என்ற கேள்விக்கு சரியான விடையை எழுதிய 800 பேருக்கு பாராட்டுச் சான்றும், பரிசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT