Last Updated : 04 Aug, 2023 03:43 PM

 

Published : 04 Aug 2023 03:43 PM
Last Updated : 04 Aug 2023 03:43 PM

சோழர், பாண்டியர் கால வரலாற்று ஆவணம் - தொல்லியல் சின்னமாகுமா கோவிலாங்குளம் கோயில்கள்?

கோவிலாங்குளத்தில் உள்ள அம்பலப்பசாமி கோயில்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தில் கி.பி.12-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோயிலையும், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயிலையும் தொல்லியல் சின்னமாக பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என தொல்லியலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் என அழைக்கப்படும் இவ்வூர் வெண்பு வளநாட்டு செங் காட்டிருக்கை கும்பனூரான குணகணாபரண நல்லூர் என கல்வெட்டில் கூறப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பகுதியில் கி.பி.12-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோயிலும், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயிலும் உள்ளன. இக்கோயில்களில் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு வழிகாட்டுதலில் கள ஆய்வு செய்தார்.

வே.சிவரஞ்சனி

இக்கோயில்களின் சிறப்புகள் குறித்து வே.சிவரஞ்சனி கூறியதாவது: அம்பலப்பசாமி கோயில் ஊரின் தெற்கில் கோயில் போன்ற அமைப்பில் கருவறையும் அர்த்தமண்டபமும் உள்ள பெரிய மேடை போன்ற இடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிற்பங்கள் உள்ளன. இதில், தெற்கில் 24-ம்தீர்த்தங்கரர் மகாவீரரும், வடக்கில் முக்குடைகளின் கீழ் ஒரு தீர்த்தங்கரரும், நடுவில் சுருள்முடியுடன் ஒரு தீர்த்தங் கரரும் உள்ளனர். இதை அம்பலப்பசாமி கோயில் என்கிறார்கள்.

இங்கு கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழனின் 3 கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒன்று முக்குடையோரான ஜைனர்களுக்கு ‘திருமண்டபம், செம்பொன் திவ்ய விமானம் செய்து திருக்கோயில் அமைத்ததாக’ சொல்கிறது.

இதன் பராமரிப்புக்காக நிலங்களும், கிணறும், நறுந்தண்ணீர் பந்தலும் அமைத்துக் கொடுத்துள்ளனர். மற்ற இரு கல்வெட்டுகளில் சில ஊர்ப் பெயர்களும், அதிகாரிகள் பெயர்களும் வர்ணனையுடன் வருகின்றன. இதன்மூலம் கி.பி.12-ம் நூற்றாண்டுகளில் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிய உதவுகிறது.

இவ்வூருக்கு அருகில் புல்லூர், தொப்பலாக்கரை, குறண்டி ஆகிய ஊர்களில் சமணப் பள்ளிகள் இருந்துள்ளன. ஆனால் இங்கு பள்ளி என்ற சொல்லே கல்வெட்டில் வராததும், திருக்கோயில் என அழைக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமாக உள்ளது.

மேலும், இங்கு உள்ள எங்கும் அழகிய பெருமாள் கோயிலில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இதில், மூன்று குலசேகர பாண்டியர்களுடையது. வரமண்ண வீரர் குறி நம்பிள்ளை, நாரணன், சாணாடனான கன்னி நாட்டரையன் ஆகியோர் இவ்வூர் கோயிலுக்கு கொடையாக பசு, நூறு குழி நிலம் வழங்கியதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயில் விமானம் பிரஸ்தரம் வரை கருங்கற்களாலும், அதன் மேல்பகுதி சுதை மற்றும் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. ஸ்தூபி சேதமடைந்துள்ளது.

பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட இக்கோயில், புற்கள் முளைத்து ஆங்காங்கே கற்கள் இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. கருவறையும், அர்த்த மண்டபமும் சேதமடைந்த நிலையில் மிஞ்சியுள்ளது. மகாமண்டபத்தில் அடித்தளத்தை மட்டுமே காணமுடிகிறது. சிற்பங்களோடு உள்ள தூண்கள் கோயிலருகில் உடைந்து கிடக்கின்றன. கோயில் கிணறு குப்பை போடும் இடமாக உள்ளது.

சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுஆதாரத்துடன் நீண்டதொரு வரலாற்றையும் தனக்குள் கொண்டுள்ள, கோவிலாங்குளத்தின் சமண, வைணவ கோயில்களை தொல்லியல் துறையினர் புணரமைத்து தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x