Published : 01 Aug 2023 02:17 PM
Last Updated : 01 Aug 2023 02:17 PM
மதுரை: காந்தியடிகளின் அரையாடை புரட்சிக்கு வித்திட்டது மதுரை என்றால், அவரின் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு விதை போட்டது தென் ஆப்பிரிக்கப் பயணம் தான். தமிழர்களுடனான காந்தியின் தொடர்பு, தென்னாப்பிரிக்காவில் அவர் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியபோதே தொடங்கி விட்டது எனலாம்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து கறுப்பினத்த வருக்காக அங்கு சத்தியா கிரகப் போராட்டத்தைத் தொடங்கியபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இந்திய வம்சாவழி தமிழர்கள் தான். இந்தப் போராட்டத்தில் மையப்புள்ளியாகப் பார்க்கப்படுவது, தென் ஆப்பிரிக்காவின் பீட்டர் மாரிஸ்பட் பர்க் ரயில் நிலையத்தில் காந்தியடிகள் தள்ளி விடப்பட்ட சம்பவம் தான்.
இந்த ரயில் நிலையத்தில் காந்தியடிகளின் நினைவாக கல்வெட்டு உள்ளது. மேலும் அங்குள்ள ஓய்வறை காந்தியடிகளின் வரலாற்றைத் தொகுத்து சிறு அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. இந்நிலையில் பீட்டர் மாரிஸ் பட்பர்க் ரயில் நிலையத்தில் காந்தியடிகள் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட 130-வது ஆண்டு சரித்திர நிகழ்வு தொடர்பான நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இதில் காந்தியடிகளின் 2-வது மகன் மணிலால் மகள் இழா காந்தி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து 8 காந்தியவாதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் ஆ.அண்ணாமலை, மதுரை காந்தி அருங்காட்சியகச் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ், பொருளாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், காந்தி கல்வி நிலைய சென்னையின் தலைவர் மோகன், ஒருங்கிணைப்பாளர் பிரேமா, பேராசிரியர் ராமலிங்கம், ஜான் செல்லத்துரை, டாக்டர் வல்லபி ஆகியோர் தென் ஆப்பிரிக்காவின் பீட்டர் மாரிஸ்பட்பர்க் சென்றிருந்தனர்.
காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா இனவெறிக்கு எதிராக தொடங்கிய ‘இந்தியன் ஒபீனியன்’ என்ற பத்திரிகை அலுவலகக் கட்டிடம், அவருக்காக அவரது நண்பர் காலன்பர்க் கட்டித்தந்த வீடு, காந்தியடிகள் தள்ளிவிடப்பட்ட ரயில் நிலையம் ஆகிய இடங்களை இவர்கள் பார்வையிட்டனர். மேலும், காந்தியடிகளுடன் போராட்டக்களத்தில் நின்ற தென் ஆப்பிரிக்காவில் வசித்த அன்றைய கால வம்சாவளி தலைமுறையினரைச் சந்தித்து உரையாடினர்.
அவர்களில் பலர் மதுரை, மேலூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் இருந்து சென்றவர்கள். அவர்களுக்கு தமிழகம் வர அழைப்பு விடுக்கப்பட்டது. காந்தியடிகள் தள்ளி விடப்பட்ட பிறகு அடிக்கடி போராட்டங்கள் நடந்ததால், பீட்டர் மாரிஸ்பட்பர்க் ரயில் நிலையம், முறையான பராமரிப்பு இன்றி பயணிகள் ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. தற்போது சரக்கு ரயில் மட்டுமே சென்று வருகிறது.
இந்தப் பயணம் பற்றி மதுரை காந்தி அருங்காட்சியகச் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் கூறியதாவது: 1883-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழில் செய்வதற்காக தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தியடிகள், அங்கு சராசரி மனிதனாகவே வாழ விரும்பினார். ஆனால், 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி பீட்டர் மாரிஸ்பட்பர்க் ரயில் பயணம் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
ரயிலில் முதல் வகுப்பில் பயணித்த ஆங்கிலேயர் இருவரின் நிறவெறியால் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக காந்தியடிகள் இறக்கிவிடப்பட்ட அன்றைய நாள்தான் தென் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் ஆங்கி லேயர் ஆட்சிக்கு முடிவுகட்ட தொடக்க நாளாகக் குறிக்கப்பட்டது. வழக்காட தென் ஆப்பிரிக்கா சென்ற காந்தியடிகளை, விடுதலைப் போராட்டத் தலைவராக இந்தியாவுக்கு அனுப்பியது தென் ஆப்பிரிக்கா.
1915-ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பிய காந்தி விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் போராட்டக் களத்தில் இருந்தவர்களின் 3-வது தலைமுறையினர் தற்போது அங்கு வசிக்கிறார்கள். அவர்களுக்கும், தமிழகத்தில் உள்ள உறவினர்களின் தொடர்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டதால் அவர்கள் தமிழ் மொழியையே மறந்து விட்டனர்.
தமிழக அரசு, தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களின் குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்க அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பாடத்திட்டங்களையும், அதற்கான இருக்கை களையும் ஏற்படுத்த வேண்டும். சர்வோதயமும், சத்தியாகிரகமும் விளைந்த தென் ஆப்பிரிக்கா மண்ணில் தமிழ் கலாச் சாரத்தை வளர்த்தெடுக்க தென் ஆப்பிரிக்கா - தமிழக உறவைப் பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT