Published : 29 Jul 2023 08:06 PM
Last Updated : 29 Jul 2023 08:06 PM
லக்னோ: காணாமல் போன கணவரை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான நெகிழ்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டம் தேவகாளியைச் சேர்ந்தவர் ஜானகி தேவி. அவரது கணவர் மோட்டிசந்த் வர்மா (44). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தேவி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பாலியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அந்த மருத்துவமனையின் வாசலில் தலை நிறைய திருத்தாத நீண்ட முடியுடன், முகத்தில் தாடியுடன் ஒருவர் மெலிந்த தோற்றத்தில் அமர்ந்துள்ளார். அவரைப் பார்க்கும்போது தேவிக்கு தன் கணவரைப் போலவே இருந்துள்ளது. உடனே தேவி நெருங்கிச் சென்று பார்த்துள்ளார். அப்போது தாடி, நீண்ட முடியுடன் இருந்த அந்த நபர் அவரது கணவர் என்பதை அறிந்து கொண்டார்.
In UP's Ballia, a woman was reunited with her husband who had gone missing 10 years ago. The woman claimed she bumped into her missing husband while she was on her way to hospital. pic.twitter.com/eNGrih1p52
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் காணாமல் போன கணவரைக் கண்ட ஜானகி அவரைத் தொட்டு அவரிடம் தன்னை நினைவிருக்கிறதா என்ற கேட்ட தருணமும், அவர் தனது கணவரின் கன்னங்களைத் தடவிக் கொடுத்த காட்சிகளும் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கணவருக்கு அவர் தண்ணீரும் உணவும் கொடுத்து கதறி அழுகிறார். ஆனால் அந்த நபரோ பிரஞ்னையின்றி ஏதோ யாசகர் போல் இருக்கிறார்.
அப்பெண் போனில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு என் கணவர் கிடைத்துவிட்டார். அவருக்கு ஒரு மேல்சட்டை கொண்டுவாருங்கள் என்று உணர்வுபூர்வமாக சொல்லும் காட்சிகள் அனைத்தும் காண்போரை நெகிழச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த உள்ளூர் ஊடகங்கள் அங்கு விரைந்து செல்ல அவர்களிடம் தேவி பேசினார். "எனக்கும் எனது கணவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவர் எங்களுக்குத் திருமணமான 12வது ஆண்டில் காணாமல் போனார். அவரை நான் உ.பி முழுவதும் தேடினேன். அருகில் உள்ள பிஹார் மாவட்டம் ஏன் நேபாளம் வரைகூட சென்று தேடினேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் எனக்குக் கிடைத்துள்ளார்" என்றார். ஆட்டோ ரிக்ஷாவில் தேவியின் அருகில் அமர்ந்திருந்த மோட்டிசந்த் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT