Last Updated : 29 Jul, 2023 02:47 PM

 

Published : 29 Jul 2023 02:47 PM
Last Updated : 29 Jul 2023 02:47 PM

ஆனைமலையில் தொன்று தொட்டு தொடரும் ‘பாப்பட்டான் குழல்’ விளையாட்டு!

பொள்ளாச்சி: ஆறுகள், குளம், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்தோடுவதை கொண்டாடும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்காக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்று கூடி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கண்டு ரசிப்பது வழக்கம்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வாழை மட்டையில் விளக்குகளை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு, ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படும். விவசாயத்தை வாழ்வியல் முறையாக கொண்ட பொள்ளாச்சி,ஆனைமலை பகுதிகளில் ஆடிப்பட்டம் விதைப்பு வீண் போகாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால், இன்றுவரை ஆடிப்பெருக்கு தினத்தைசிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஆடி 18-ம் நாளன்று தமிழகத்தில் ஆனைமலை வட்டாரத்தில்மட்டுமே பிரத்யேகமாக நடைபெறும் பாப்பட்டான் குழல் விளையாட்டு, பல தலைமுறைகளாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விளையாட்டாக மாறியுள்ளது.

தமிழகத்தில் இங்கு மட்டுமே நடைபெறும் பாப்பட்டான் குழல் விளையாட்டு பழமை மாறாமல் உள்ளது. பனைமரத்தின் குருத்தோலை, கல்மூங்கில் குச்சி கொண்டு தயாரிக்கப்படும் பாப்பட்டான் குழலில், பாப்பட்டான் செடியின் காய்களை வைத்து அடித்து விளையாடுவது சிறுவர்களுக்கு பிடித்த ஒன்றாக உள்ளது. இதற்காக, கடந்த சில மாதங்களாகவே பாப்பட்டான் குழல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார், ஆனைமலையை சேர்ந்த மணிகண்டன்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலை பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வந்தது. நிலக்கடலை பறிப்பின்போது, அவற்றை கொத்தித்தின்ன காகம், குருவிகள் அதிக அளவில் வரும். அவற்றை விரட்ட உருவாக்கப்பட்டது தான் பாப்பட்டான் குழல்.

கல்மூங்கில்களை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் துளையிட்டு பாப்பட்டான் குழல் தயார் செய்வோம். பின்னர், அதில் பனைமரத்தின் குருத்தோலையை கொண்டு சுருள் செய்து, மூங்கிலில் பொருத்தி அதன் மீது வண்ண காகிதங்களை ஒட்டி பாப்பட்டான் குழல் உருவாக்கப்படும்.

அதற்கேற்ப டம்மி எனும் குச்சி, கல் மூங்கிலில் தயாரிக்கப்படும். ஒரு பாப்பட்டாங்காயை எடுத்து, குழலில் உள்ள துளையில் பொருத்தி கைப்பிடி குச்சியால் வேகமாகஅழுத்தினால், அச்சிறுகாய் உடைந்து சிதறும். அப்போது பட்டாசுவெடிப்பது போல சத்தம் வரும். குழாயின் கூம்பு வடிவம், அவ்வொலியை பெரிதுபடுத்தும். இது பட்டாசு வெடிப்பதைபோல இருக்கும். இந்த சத்தம் கேட்டு பறவைகள் பறந்துவிடும். பின்னர் காலப்போக்கில் ஆடிப்பெருக்கு அன்று மட்டும் விற்கப்படும் விளையாட்டுப் பொருளாக மாறியது.

ஆனைமலையில் பாரம்பரியமிக்க
பாப்பட்டான் குழல் தயாரிப்பில்
ஈடுபட்டுள்ள தொழிலாளி.

ஆனைமலை வட்டாரத்தில் பாப்பட்டான் குழல் இல்லாமல் ஆடிப்பெருக்கு கிடையாது. ஆடிப்பெருக்குக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான், இந்த பாப்பட்டான் குழல் தயாரிக்கும் வேலையை தொடங்குவோம். மிகவும் கஷ்டமான வேலை என்பதால், ஆனைமலையில் பாப்பட்டான் குழல் தயாரிப்பில் தற்போது ஒரு சில குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றன. பாரம்பரியம் அழியாமல் இருக்க, இந்த தொழிலை செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு 15 முதல் 20 பாப்பட்டான் குழல் தயாரிக்க முடியும். பாப்பட்டான் குழலுக்கு தேவையான காய்களை, கிராமங்களில் உயிர்வேலிகளிலுள்ள பாப்பட்டான் செடியில் இருந்துபறித்து வருவோம்.

இந்த பாப்பட்டான்குழல், நாட்டிலேயே ஆனைமலை பகுதியில் மட்டும்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது காலமாற்றத்துக்கேற்ப குழந்தைகளை கவர்வதற்கு பல வண்ணங்களில் குழல் தயாரிக்கப்படுகிறது. ஒரு குழல் ரூ.100 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பாப்பட்டான் குழல் பற்றி தெரிவதில்லை. எனவே, பெற்றோர்கள் நமது பாரம்பரியத்தை பாதுகாக்க, குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லி தர வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x