Published : 24 Jul 2023 02:50 PM
Last Updated : 24 Jul 2023 02:50 PM
மதுரை: மூளைச்சாவு உடல் மாற்று சிகிச்சையில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை வகித்தாலும், அரசு மருத்துவமனைகளில் ஆமை வேகத்தில் இத்திட்டம் செயல்படுகிறது. அதனால், ஏழை நோயாளிகள் இந்த திட்டத்தால் பயன்பெற முடியவில்லை.
மூளைச்சாவு உறுப்பு மாற்று உடல் தானத்தை ஊக்கப்படுத்த வேண்டும், உயிருக்குப் போராடும் பலர் உயிர் பிழைக்க வேண்டும் என்று உயர்ந்த நோக்கோடு மூளைச்சாவு உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் 2008-ல் சுகாதாரத் துறை மேற்பார்வையில் அமல்படுத்தப்பட்டது. அன்படி ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு உறுப்புக்கு, தனித் தனியாக சுகாதாரத் துறையிடம் அனுமதி பெறவேண்டும் என விதிமுறை உருவாக்கப்பட்டது.
இத்திட்டம், தமிழகத்தில் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் உடல் உறுப்பு தானம் பெறுவதில் தொடங்கி, பிற நோயாளிகளுக்கு உறுப்புகள் பொருத்துவது என அனைத்திலும் அரசு மருத்துவமனைகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு 85 சதவீதத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
இதுவரை தமிழகத்தில் சிறுநீரகத்துக்கு 97 மருத்துவமனைகள் அனுமதியில் 86 தனியார், வெறும் 11 அரசு மருத்துவமனைகளும், கல்லீரலுக்கு 49 அனுமதியில் 44 தனியார், 5 அரசு மருத்துவமனைகளும், இதயத்துக்கு 29 தனியாரும், 4 அரசு மருத்துவமனைகளும், நுரையீரலுக்கு 23 தனியார், 2 அரசு மருத்துவமனைகளும் அனுமதி பெற்றுள்ளன. இதேபோல் இதய வால்வு, தோல், கண்கள், கணையம் என அனைத்து உறுப்புகளுக்கான அனுமதி பெற்றதில் தனியார் மருத்துவமனைகளே அதிகம்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளில் மொத்தம் 1650-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அதில் அரசு மருத்துவமனைகள் பெற்ற தானங்களின் எண்ணிக்கை 250 மட்டுமே. இதுவே தனியார் மருத்துவமனைகள் 1350-க்கும் மேற்பட்ட உடல்களைத் தானமாகப் பெற்றுள்ளன.
இதன் மூலம் 10,003 உறுப்புகளுக்கு மேல் கிடைத்துள்ளது. அவற்றில் சுமார் 9,000 உறுப்புகளுக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு நோயாளியிடமிருந்தும் பல லட்ச ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெயரளவில் மட்டுமே பயன் அடைந்துள்ளனர்.
இந்த உத்தரவுக்கான கெடு முடிந்து 5 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த வசதியை ஏற்படுத்தாமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் சென்னையைத் தவிர்த்து மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், நெல்லை போன்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் தேவைப்படும் நோயாளிகளுக்குக்கூட தானமாகப் பெறப்படும் உறுப்புகள் கிடைப்பதில்லை.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி படைத்த நோயாளிகளுக்கு உறுப்புகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்படும் இருந்தும் வெறும் 13 மருத்துவமனைகளில் மட்டுமே ஆமை வேகத்தில் இத்திட்டம் செயல் படுகிறது. இதனால், பெரும்பாலும் வசதி படைத்தோர் மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறலாம் என்ற நிலை உள்ளது.
உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் தேசிய அளவில் தமிழக சுகாதாரத் துறை பல விருதுகள் பெற்று முதன்மையாகத் திகழ்ந்தாலும், ஏழை நோயாளிகளைப் பொருத்தவரை இத்திட்டம் தோல்வியே. அவர்களுக்கு இத்திட்டம் எட்டாக்கனியாக இருப்பது வேதனை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT