Published : 23 Jul 2023 04:02 PM
Last Updated : 23 Jul 2023 04:02 PM
மதுரை: ஆதரவற்றோர், கைவிடப்பட்ட முதியோர், யாசகம் கேட்போரின் பசிப்பிணி போக்கும் அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை யில் செயல்படும் உயிர் காப்பான் நண்பர்கள் குழுவினர்.
பலவித தானங்கள் இருந்தாலும் பசிப்பிணியை போக்கும் அன்னதானம் தான் சிறந்தது என்பர். வறுமையும், பசிப்பிணியும் இல்லாத நாடுதான் வளமான நாடு என ஆன்றோர்கள் கூறுவர். இதை மனதில் வைத்து தங்களால் இயன்ற அளவுக்கு பசிப் பிணி போக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள்.
உயிர் காப்பான் அறக்கட்டளையை ஏற்படுத்தி செயல்பட்டு வரும் இவர்கள், ஆதரவற்றோரை தேடிச் சென்று உணவளித்து வருகின்றனர். மதுரையில் நகர் பகுதியில் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், அழகர்கோவில் போன்ற பகுதிகளிலும், முதியோர் இல்லங்களிலும் உணவு வழங்கி வருகின்றனர்.
இது குறித்து மதுரை தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பா.வல்லரசு, ரா.சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது: நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது முதி யோர் எங்களிடம் கையேந்தி சாப்பிடுவதற்கு பணம் கேட்பார்கள். அது எங்களுடைய மனதை மிகவும் பாதித்தது. அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவியை செய்தோம்.
நாம் ஆடம்பரமாக செய்யும் ஒருநேர செலவு மற்றவர்களின் 3 வேளை உணவுக்கு பயன்படும். இதை உணர்ந்த நாங்கள் படிப்பு முடிந்த பின்பு, இதுபோன்று ஆதரவற்றோருக்கும், கைவிடப்பட்ட முதியோருக்கும் உணவளிக்க வேண்டும் என முடிவெடுத்தோம். ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து வாரம் ஒருநாள் உணவளித்து வருகிறோம்.
இப்பணியை கடந்த 5 ஆண்டுகளாக செய்து வருகிறோம். ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது உணவு வழங்கி வருகிறோம். அவர்களின் வயிற்றுப் பசியைப் போக்கிய ஆத்ம திருப்தி கிடைக்கிறது. கல்லூரியில் எங்களுடன் படித்த நண்பர்கள் தற்போது திண்டுக்கல், திருநெல்வேலியிலும் ‘உயிர் காப்பான்’ அமைப்பு மூலம் உணவு வழங்கி வருகின்றனர்.
மதுரையில் நண்பர்கள் வெ.நாகேந்திரன், ருத்ர பிரபு, ம.சபரிவாசன், சுல்தான் அலாவு தீன், சே.கபிலன் மா.கவுரி சங்கர், அஜய் ராகுல் உள்ளிட்டோர் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நண்பர்கள் பலர் உதவி செய்து வருகின்றனர். விரைவில் தினமும் உணவு வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT