Published : 21 Jul 2023 07:34 AM
Last Updated : 21 Jul 2023 07:34 AM

ஆந்திராவில் முனைவர் பட்டம் பெற்ற பெண் தொழிலாளி

தனது குடும்பத்துடன் பாரதி

அனந்தபூர்: ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலி தொழிலாளி ஒருவர், ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண தேவராய பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. ஆந்திர ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற பாரதி எனும் மாணவியை மேடைக்கு அழைத்தனர்.

அந்த அழைப்பை கேட்டு, சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அறுந்த செருப்பு, பழைய புடவையை உடுத்தியபடி, தனது கணவர் மற்றும் மகளுடன் மேடையை நோக்கி வந்தார். இதனால், ஆந்திர ஆளுநர் உட்பட மேடையில் இருந்த பல்கலை துணை வேந்தர், பேராசிரியர்கள் என அனைவரும் ஆச்சர்யத்துடன் பாரதியை பார்த்தனர். அவர் மேடைக்கு வந்ததும் அவருக்கு ஆளுநர் முனைவர் பட்டத்தை கையில் கொடுத்து வாழ்த்தினார். ஒரு கூலி தொழிலாளி, கஷ்டப்பட்டு ரசாயனவியலில் முனைவர் பட்டம் பெற்றதை அந்த பல்கலைக் கழகமே கை தட்டி பாராட்டியது.

கணவர் ஊக்கப்படுத்தினார்: முனைவர் பட்டம் பெற்றது குறித்து பாரதி கூறியதாவது:

அனந்தபூர் மாவட்டம், சிங்கனமலை நாகுலகட்டம் எங்கள் சொந்த ஊர். சிறு வயது முதலே எனக்கு நன்றாக படிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது. பிளஸ்–2 முடித்ததும் எனக்கு எனது தாய் மாமன் சிவபிரசாத்துடன் திருமணம் நடந்தது. அதன் பின்னர் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆதலால், வீட்டு பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு கணவரையும், குழந்தையையும் கவனிக்க தொடங்கினேன். வருமானத்திற்காக, கணவருடன் விவசாய கூலி வேலைக்கு சென்றேன்.

எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்ததால், மேல்படிப்பு படிக்க எனது கணவர் ஊக்கப்படுத்தினார். நான் ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்தேன். முனைவர் பட்டப் படிப்பில் சேர பேராசிரியர் சுபா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார். வீட்டில் இருந்தபடியே இரவெல்லாம் படிப்பேன்.

காலையில் கூலி வேலைக்கு சென்று எனது கணவருக்கு உறுதுணையாக இருந்தேன். எனது குடும்ப வறுமை, பெண்ணின் எதிர்காலத்தை நினைத்து படிக்க தொடங்கினேன். தற்போது நான் முனைவர் பட்டம் வாங்கி விட்டேன் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. எனது கல்வியை நான் எழைகள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவேன். இவ்வாறு பாரதி கூறினார்.

முனைவர் பட்டம் பெற்றதை அறிந்து அக்கம் பக்கத்தினர், ஊர்காரர்கள் பலர் பாரதி வீட்டை தேடி வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x