Published : 19 Jul 2023 02:38 PM
Last Updated : 19 Jul 2023 02:38 PM

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபி சிகிச்சை நவீனப்படுத்தப்படுமா?

மதுரை: முறையான உடற் இயக்க பயிற்சியின்மை, உணவு பழக்கங்களால் தற்போது மனிதர்களுக்கு இனம் தெரியாத நோய்கள் வருகின்றன. அதில் தசை, எலும்பு வலிமை குறைவதால் சில சமயங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை கூட மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

தசைக் கூட்டில் ஏற்படும் சமச் சீரற்ற நிலை நாளடைவில் தசைக்கூட்டு பாதிப்புகளாக உருமாறுகின்றன. நீண்ட நாள் பாதிப்புகளாக மாறி, உடல் இயக்க குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவோர் மருந்து, மாத்திரைகளை தாண்டி பிசியோ தெரபி போன்ற சிகிச்சை முறையை நாடி வருகின்றனர்.

அவ்வாறு அரசு மருத்துவமனையை நோக்கி வரும் நோயாளிகளுக்கு தீர்வு கிடைப்பதற்கு ஏற்ப உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அரசு மருத்துவமனைகளில் பிசியோ தெரபி உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வில்லை. சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் கருவிகள் கூட அரசு மருத்துவ மனைகளில் இல்லை.

அவசர விபத்து அறுவை சிகிச்சைக்குப் பின்பு பயன்படுத்தப்படும் சிபிஎம் எனப்படும் மூட்டு இறுக்கத்தைத் தளர்த்தும் இயந்திரம் அரசு மருத்துவமனைகளில் இல்லை. அதேபோல், லேசர் கருவி, எலக்ட்ரிக்கல் ஸ்டிமுலேட்டர், பாடி வெயிட் ட்ரெட்மில், ஷாக் வேவ் தெரபி, பயோ மேக்னடிக் தெரபி, ஐசோ கைனடிக் பயிற்சி கருவி, நடை திருத்த கணினி உள்ளிட்ட பல உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இல்லை.

வெ.கிருஷ்ணகுமார்

இது குறித்து இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோ தெரபிஸ்ட்கள் சங்க மாநிலத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: பிசியோ தெரபி சிகிச்சைக்காக அரசு மருத் துவமனையை நாடிவரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நவீன சிகிச்சை இன்றும் எட்டாக்கனியாக உள்ளது. இதில் அரசை மட்டுமே குறை சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இதுவரை இயன் மருத்துவத் துறைக்கு தலைமை பொறுப்பாக சுட்டிக் காட்டப்படும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு இயன் மருத்துவத் துறையை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் பிசியோ தெரபிஸ்ட்களுக்கு மட்டுமே அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாகத் தெரியும்.

மக்கள் நேரடியாக வெளிநோயாளி பிரிவில் பதிவு செய்து பிசியோ தெரபி துறைக்கு செல்வதற்கான வழிமுறைகளை அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த இயன் மருத்துவ மையங்களை ஒவ்வொரு தாலுகாவிலும் நவீன கருவிகளுடன் அமைக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒன் ஸ்டாப் சென்டராக நிறுவினால் அரசு பங்களிக்கும் மருத்துவ செலவினங்களை வெகுவாக குறைக்க முடியும்.

பிசியோ தெரபி உபகரணங்கள் வாங்க ஒரு முறை முதலீடு மட்டுமே தேவை. அவற்றை பயன்படுத்த துணை பொருட்கள் என பெரிய தேவை ஏதும் இல்லை.தசைக் கூட்டு பாதிப்புகளுக்கு தற்போது பிசியோ தெரபி துறையில் உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் தீர்வு நிச்சயம் உண்டு என்ற நிலையில் அரசு மருத்துவமனைகளில் அதி நவீன கருவிகளை கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x