Last Updated : 15 Jul, 2023 03:15 PM

 

Published : 15 Jul 2023 03:15 PM
Last Updated : 15 Jul 2023 03:15 PM

காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் - ஓர் எளிய வரலாற்றுக் குறிப்பு

விருதுநகர்: பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.

காமராஜர் கர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர். அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.

அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தவர் காமராஜர். 1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.

பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று (15ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜர் பிறந்த பிறந்த ஊரான விருதுநகரில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுவதால் விருதுநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x