Published : 13 Jul 2023 05:14 PM
Last Updated : 13 Jul 2023 05:14 PM
மதுரை: மதுரை ராஜாஜி பூங்காவில் குப்பைகள் தேங்கி சுகாதாரமும் இல்லை, கொடுத்த நுழைவுக் கட்டணத்துக்கு பூங்காவினுள் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு உபகரணங்களும் இல்லாத நிலை நீடிக்கிறது.
வரலாற்றுப் பெருமைகளுக்கும், ஆன்மீகத்துக்கும் புகழ்பெற்ற மதுரையில் பொதுமக்கள், வார விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்கு சினிமா திரையரங்குளையும், மால்களையும், கோவில்களையும் விட்டால் வேறு இடம் இல்லை. குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாடுவதற்கான ஒரே பூங்காவாக காந்தி மியூசியம் அருகே உள்ள ராஜாஜி பூங்கா இருந்தது. தற்போதும் பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாத நிலையுடன் இருக்கிறது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பூங்கா.
வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் வந்த ராஜாஜி பூங்காவுக்கு தற்போது 500 பேர் வந்தாலே அபூர்வமாக உள்ளது. அந்த அளவுக்கு பூங்காவின் பராமரிப்பு மோசமாக உள்ளது.
பூங்காவின் ஒரு பகுதியில் அப்புறப்படுத்தப்படாத குப்பைகள் சிதறி கிடக்கிறது. மழைக் காலங்களில் அந்தக் குப்பைகள் எல்லாம் நனைந்து தூர்நாற்றம் வீசுகிறது. செடி, கொடிகள், புற்கள் முறையாக வெட்டி அழகுப்படுத்தப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.
இசைநிரூற்று செயல்பட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மழைநீர் தேங்கி பூங்காவுக்கு வரும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாய் உள்ளது.
குழந்தைகளுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 என இருந்த நுழைவுக் கட்டணம், தற்போது முறையாக ரூ.10, ரூ.20 ஆக உயர்ந்துள்து. நுழைவுக் கட்டணம் உயர்த்தி வருவாயை பெருக்க ஆர்வம் காட்டிய மாநகராட்சி, பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை இல்லை.
பூங்காவில் உள்ள ராட்டினம், டிக்கி ரயில், பொம்மை குளம் போட்டிங், ட்ராக்கன், ரோப்கார் போன்ற விளையாட்டு உபகரணங்களுக்கான கட்டணம் ரூ.30 முதல் ரூ.50 வரை உள்ளது. அதில், ஏழை, எளிய குழந்தைகள் விளையாட செல்ல முடியவில்லை. ஆனால், இந்த விளையாட்டு உபகரணங்கள் செயல்பட இடமும் சுத்தமாகவும் இல்லை.
சறுக்கு விளையாட்டு உபகரணங்கள் துரு பிடித்தும், அதன் முனைகளில் உடைந்தும் விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. சறுக்கு விளையாட்டு உபகரணத்தில் ஏறி சறுக்கும் குழந்தைகள் வேகமாக கீழே வரும்போது, அவர்கள் கீழே விழுகிற இடம் மணலாக இருக்க வேண்டும். சறுக்கு விளையாட்டில் கீழே விழும் இடத்தில் கட்டாந்தரையாக உள்ளது. அதனால், சில நேரங்களில் சரக்கில் மேலே இருந்து வேகமாக வரும் குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இந்தப் பூங்கா நகரின் மையத்தில் இருப்பதால் வார நாட்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் வருகை அதிகமாகவும், வார இறுதி நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள், குழந்தைகள் வருகை அதிகமாகவும் இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக நூறு பேர் மட்டுமே வருகின்றனர். வார இறுதி நாட்களில் 500 பேர் வருவதாக பூங்கா ஊழியர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வந்த பூங்காவில் தற்போது பூங்காவின் பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் வருகை குறைந்துள்ளது.
இந்த நிலையை மாற்றி குழந்தைகளுக்கான குதூகலமாக பூங்காவாக ராஜாஜி பூங்காவை புதுப்பொலிவுப்படுத்த மாநகராட்சி முன் வர வேண்டும். தற்போது மாநகராட்சி வருவாயும் அதிகரித்துள்ளநிலையில் நிதி பற்றாக்குறை இல்லை. இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சியில் புதிதாக 40 பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளது. பராமரிப்பு இல்லாத பூங்காக்களை புதுப்பொலிவுப்படுத்த திட்டம் உள்ளது. அதில் ராஜாஜி பூங்கா முதன்மையானது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT