Last Updated : 12 Jul, 2023 02:50 PM

 

Published : 12 Jul 2023 02:50 PM
Last Updated : 12 Jul 2023 02:50 PM

வண்ண ஓவியங்கள், வடிவங்களுடன் புத்துயிர் பெறும் பழமையான கிணறுகள் - இது விருதுநகர் வியப்பு!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாடு இன்றி நீண்ட காலமாக கைவிடப்பட்டு தூர்ந்துபோன கிணறுகள், மீண்டும் தூர்வாரப்பட்டு வண்ண ஓவியங்களால் புதுப் பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நீரை சிக்கனமாக பயன்படுத்துவதும், நீர், நிலைகளை பாதுகாக்கவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நூற்றாண்டில் கிணறுகளே மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரம். ஒவ்வொரு கிராமத்திலும் ஊருக்கு நடுவே ஒரு பொது கிணறு குடிநீர் தேவைக்காக இருந்து வந்தது.

காலப்போக்கில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் தெருக்களில் அடிகுழாய்கள் அமைக்கப்பட்டன. அதன்பின்னர், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து ஊரில் பொது மேல்நிலைத் தொட்டி கட்டி வீடுகளுக்கே குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. இதனால் நாளடைவில் கிணறுகளும், அடி குழாய்களும் மெல்ல மறக்கப்பட்டு பராமரிப் பின்றி கைவிடப்பட்டன.

ஒரு சில இடங்களில் இளைஞர் குழுக்கள், சங்கங்கள், அமைப்புகள் சார்பில் இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைந்து தங்கள் பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், பல கிராமங்களில் உயிர் நீர் கொடுத்த குடிநீர் கிணறுகள் காட்சிப் பொருளாகவும், குப்பை கொட்டும் கிடங்காகவும் மாறி விட்டன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்று தூர்வாரப்படாமல் தூர்ந்துபோன கிணறுகளை கணக்கெடுக்கும் பணி, கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட கிணறுகள் , ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 125 கிணறுகளை தேர்வு செய்து, அவற்றை புதுப்பித்து புத்துயிர் கொடுக்கும் பணியை ஊரக வளர்ச்சி முகமை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் பயன்பாடு இல்லாத 125 கிணறுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் புணரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு கண்கவர் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேகநாதரெட்டி ஆட்சியராக இருந்தபோது இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனும் இத்திட்டத்துக்கு ஊக்கமளித்து வருகிறார்.

ஒரு கிணறுக்கு ரூ.65 ஆயிரம் வீதம் செலவிடப்பட்டு புணர மைக்கப்படுகிறது. இதன்மூலம் நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் தேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களையும் தங்கள் பகுதி நீர் நிலைகளை பாதுகாக்கச் செய்வதே நோக்கம். மீதமுள்ள 200 கிணறுகளும் விரைவில் புணரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x