Published : 12 Jul 2023 02:35 PM
Last Updated : 12 Jul 2023 02:35 PM
வட இந்தியாவில் மட்டுமே ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பானிபூரி இப்போது இந்தியா முழுவதுமே பரவிக் கிடக்கும் ஒரு துரித உணவாக இருக்கின்றது. இந்நிலையில், இன்று கூகுள் தனது டூடுலில் பானிபூரியைக் கொண்டாடியுள்ளது. கூடவே, ஒரு கேம் வெளியிட்டு சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள இந்தூரி ஜாய்கா என்ற உணவகம் 51 வகை பானிபூரிக்களை படைத்து உலக சாதனை புரிந்தது. அதனை நினைவுகூர்வதுபோல் இன்று கூகுள் பானிபூர் டூடுல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் தனது வலைப்பக்கத்தில் விவரித்துள்ளது.
பானிபூரியை புச்க்கா, குப் - சுப், கோல் கப்பா போன்ற பெயர்களில் விற்கப்படும் தெற்காசிய சாலையோர உணவு, மொறுமொறுவென்ற கூடு கொண்டது. உள்ளே உருளைக்கிழங்கு, சுண்டல், மசாலா மற்றும் சுவையூட்டப்பட்ட தண்ணீர் இருக்கும் என்று விவரித்துள்ளது.
கூகுள் கேம்: கூகுள் டூடுளை கிளிக் செய்தால் அது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டுக்கு இட்டுச் செல்கிறது. அது ஒரு சாலையோர பானிபூரி வியாபாரிக்கு ஆர்டரைப் பெற உதவுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஃப்ளேவர்கள், அளவுகளை தேர்வு செய்து கொடுத்து விளையாட்டுக்கான புள்ளிகளைப் பெறலாம்.
பலபெயர் ஒரே ருசி; ஒரே ரூல்: பானி பூரியை இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் வழங்குகின்றனர். வேகவைத்த சுண்டல், முளைகட்டிய தானியங்களுடன் கூடிய பூரிக்குள் இனிப்பு புளிப்பு சுவை நீர் ஊற்றி பானி பூரி என்ற பெயரில் மகாராஷ்டிராவில் வழங்குகின்றனர்.
பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுடெல்லியில் உருளைக்கிழங்கு, சுண்டலுடன் கூடிய பூரியை ஜல்ஜீராவில் முக்கி எடுத்துக் கொடுக்கின்றனர். இதற்கு கோல் கப்பே அல்லது கோல் கப்பா என்று பெயர் வழங்குகின்றனர். மேற்கு வங்கத்தில் இதனை புச்காஸ் அல்லது ஃபுச்காஸ் எனக் கூறுகின்றனர். பிஹார், ஜார்க்கண்டில் இதை ஃபுச்காஸ் என்றே கூறுகின்றனர். புளி கரைசல் தான் ஃபுச்காஸின் பிரதான சுவையூட்டியாக இருக்கிறது.
பானிபூரி பெயர் பல என்றாலும், சுவை வெவ்வேறு என்றாலும் பானிபூரி சாப்பிட ஒரே ஒரு முறைதான் இருக்கின்றது. அதிக நேரம் ஊறவைத்தால் ஒவ்வாது என்பதுதான் அதை சாப்பிடுவதற்கான ஒரே ரூல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT