Published : 10 Jul 2023 07:29 PM
Last Updated : 10 Jul 2023 07:29 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையில், தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான முனைவர் சேகர், ஆய்வு மாணவர் பா.தரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த 'சுடுகாட்டூர்' என்ற இடத்தில் களஆய்வு மேற்கொண்டபோது, ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத் தடயங்களான கற்கருவிகள் மற்றும் அவற்றை கூர்மைப்படுத்திய இடம் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, ''தமிழகத்தின் தொன்மையினைப் பறைசாற்றும் ஆவணங்களாத் திகழ்பவை தொல்லியல் எச்சங்களாகும். இந்த வகை தொல்லியல் எச்சங்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக அளவில் கிடைக்கின்றன.சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த சந்திரபுரம் மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்பில் கள ஆய்வு நடத்தியபோது, அங்கு புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளைக் கண்டறிந்தோம்.
சுடுகாட்டூருக்கும் சந்திரபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள மாந்தோப்பின் நடுவே 20 மீட்டர் சுற்றளவு கொண்ட பாறை ஒன்று காணப்படுகிறது. அந்த பாறையின் நடுவே இயற்கையாக அமைந்த சுனை ஒன்று காணப்படுகிறது. 5 அடி ஆழம் கொண்ட அந்த சுனையில் கோடையிலும் வற்றாமல் நீர் தேங்கியுள்ளது. இந்தச் சுனையின் அருகாமையில் இரண்டு இடங்களில் புதிய கற்கால மக்கள் தம் கற்கருவிகளைக் கூர்மைப்படுத்தவும் பளபளபாக்கவும் செய்த தடங்கள் காணப்படுகின்றன.
இந்த பாறையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சந்திரபுரம் மலையில் இருந்து வரும் ஓடை ஒன்றும் காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். தற்போது வறண்டு காணப்படும் அந்த ஓடையில் கள ஆய்வு நடத்தியதில், நான்கு கல் ஆயுதங்கள் எங்கள் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தனர். அவை நன்கு தேய்த்துப் பளபளப்பாக்கப்பட்டவையாகும். இவ்வகைக் கற்கருவிகள் புதியகற்கால மக்கள் மக்கள் பயன்படுத்தியவையாகும்.
இங்குக் கிடைத்துள்ள கற்கருவிகள் பெரும்பாலும் கற்கோடாரிகளாகப் பயன்படுத்தப்பட்டவையாகத் தெரிகிறது. இந்த கற்கருவிகள் 12 செ.மீ நீளம் கொண்ட மூன்றும், 6 செ.மீ நீளம் கொண்ட ஒன்றும் என நான்கு கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. 6 செ.மீ நீளம் கொண்ட கருவியானது குறுங்கருவியாகப் பார்ப்பதற்கு அழகாகவும் கலைநுட்பத்துடனும் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும்.
புதிய கற்காலம் தமிழகத்தில் மனித வரலாற்றை நாகரிக வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களியும், மக்கள் பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு நான்கு காலங்களாக வகைப்படுத்துகின்றனர். அவை, பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் எனப்படும். இப்பிரிவுகள் அவர்கள் பயன்படுத்திய கருவிகளின் அடிப்படையில் ஏற்படவையாகும். இவற்றில் பழங்கற்கால மக்கள் ஒழுங்கற்ற கரடு, முரடான கற்களை ஆயுதக்களாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் நாடோடி வாழ்க்கை முறையினையும் கொண்டிருந்தனர்.
புதிய கற்கால மக்கள் நாகரிக வளர்ச்சியின் அடுத்த நிலையை அடைந்திருந்தனர். அவர்கள் உணவினை உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டிருந்தனர். உணவினை உற்பத்தி செய்வதற்கான முதல் படியாக அவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்கத் தொடங்கினார்கள். மனித நாகரீகத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் புதிய கற்காலத்தில் தான் காணமுடிகிறது. வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கற்கருவிளைப் பளபளப்பாக்குதல், மட்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்காலப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகும். இவர்கள் பயன்படுத்திய கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டன. வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் பளபளப்பான கூரிய கற்கோடாரிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
அத்தகைய மக்களே சந்திரபுரம் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இங்கு கண்டறியப்பட்ட கற்கருவிகளும் தடங்களும் சான்றுகளாக அமைகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் கற்கால மக்கள் வாழ்ந்த குகை, பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டது மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் இது போன்ற பழங்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவது தமிழக வரலாற்றில் இந்த மாவட்டத்தின் சிறப்பினையும் வரலாற்றுப் பின்புலத்தினையும் பறைசாற்றுவதாக உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT