Last Updated : 06 Jul, 2023 07:45 PM

 

Published : 06 Jul 2023 07:45 PM
Last Updated : 06 Jul 2023 07:45 PM

ஏழை மாணவர்களை கால்பந்தாட்ட வீரர்களாக்கும் மதுரை தலைமைக் காவலர் சுந்தர ராஜா!

மதுரை: ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டுமெனில் முறையான பயிற்சி, வழிகாட்டுதலில் அவசியம். இதன்படி, மதுரையில் விளையாட்டுத் துறையில் கால்பந்தாட்ட பிரிவில் சாதிக்க துடிக்கும், ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி ஏழை மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பிரதிபலனுமின்றி முறையாக பயிற்சி அளித்து, அவர்களை பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்க செய்து உற்சாகப்படுத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமைக் காவலர் ஏ.சுந்தர ராஜா (43).

மாநகர காவல் துறையில் மீடியா பிரிவில், பொறுப்புள்ள காவல் துறை பணியில் இருந்தாலும், சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர் சளிக்காமல் பயிற்சியளித்து, சிறந்த விளையாட்டு வீரர்களாக, உடற்பயிற்சி ஆசிரியர்களாகவும் உருவாக்குகிறார் என்பது பாராட்டுக்குரியது.

இது குறித்து சுந்தர ராஜா கூறியது: "பள்ளிப் பருவத்தில்தான் விளையாட்டு பற்றியே தெரிந்துகொண்டேன். மதுரையிலுள்ள கல்லூரிகளில் விளையாட்டுக்கென அதிக முக்கியத்துவம் தரும் கல்லூரி என கேள்விப்பட்டு, மதுரை வக்பு வாரியக் கல்லூரியை தேர்ந்தெடுத்து சேர்ந்தேன். முதுகலைப் படிப்பு வரை அங்கு படித்தபோது, கால்பந்தாட்ட விளையாட்டில் 3 முறை காமராசர் பல்கலைக்கழக அணிக்காக விளையாடினேன். 2003-ல் காவல் துறையில் கோவையில் பணியில் சேர்ந்தேன்.

விளையாட்டுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மாறுதலாகி 2008-ல் மதுரைக்கு வந்த பிறகே மீண்டும் தென்மண்டல காவல்துறை கால்பந்து அணியில் சேர்ந்து விளையாடினேன். ஒரு முறை ஆயுதப்படை மைதானத்துக்கு விளையாட சென்றபோது, அருகில் வெறும் கால்களுடன் முறையான வழிகாட்டுதலின்றி சுமார் 10 ஏழை மாணவர்கள் விளையாடுவதைக் கண்டேன். அவர்களுக்கு ஏதாவது நம்மால் முடிந்த உதவியை செய்து, முறையான பயிற்சியை அளிக்க முடிவெடுத்தேன். இதன் பிறகு அவர்களுக்கான கால் ஷூக்களை ஏற்பாடு செய்து, உரிய விதிமுறைகளுடன் பயிற்சி அளித்தேன். 2016-ல் மதுரை மாவட்ட கால்பந்து கழகம் நடத்திய போட்டியில் அவர்கள் பங்கேற்று, வெற்றி பெறும் அளவுக்கு முன்னேறினர்.

தொடர்ந்து வயதுகேற்ப பல்வேறு போட்டியிலும் பங்கேற்க செய்யும் விதமாக‘ ரிசர்வ் லைன் கால்பந்து கழகம் ’ என்ற பெயரில் அணியை உருவாக்கினேன். தற்போது, 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஏழை மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறேன். இவர்கள் ‘ ஆர்எல்எப்ஏ ’ அணி பெயரில் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்கின்றனர்.

அபுபக்கர், வீரமணி ஆகிய இரு மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியருக்கான (பிபிஎட்) கல்வி பயிலச் செய்து, பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகி உயர்ந்துள்ளனர். மேலும், சிலர் நடுவருக்கான (ரெஃப்ரி) பயிற்சி, தேர்வுகளில் ஈடுபடச் செய்கிறேன். விளையாட்டுத் துறையில் வயதுக்கேற்ப பல்வேறு வாய்ப்பு உள்ளதால், அதற்கான வழிகாட்டுகிறேன். நானும் எனது தகுதியை மேம்படுத்தும் விதமாக மாநில அணி பயிற்சியாளருக்கான ‘ சி’ லைசென்ஸ் பெற்றிருந்தாலும், தேசியளவில் பயிற்சியாளராகும் விதமாக ‘ பி ’ லைசென்ஸ் பெற முயற்சித்துள்ளேன்.

தற்போது, விளையாட்டு தொடர்பாக சில பள்ளி, கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை பேச்சாளராகவும், கவுன்சிலிங்கிற்காகவும் சிலர் அழைக்கின்றனர். விளையாட்டில் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, அவர்களை சிறந்த வீரர், வீராங்கனைகளாக்கவேண்டும் என்பதே எனது லட்சியம். இதில் எனக்கு ஆத்ம திருப்தி இருக்கிறது. ஆர்வம் கொண்டவர்கள் எந்நேரம் அழைத்தாலும் இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக இருப்பேன். இச்சேவையை பாராட்டி, பாரதி பண்பாட்டு கழகம் போன்ற சில அமைப்புகள் விருது, நினைவுபரிசுகளை வழங்கியுள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x