Published : 06 Jul 2023 06:43 PM
Last Updated : 06 Jul 2023 06:43 PM
மதுரை: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விட மதுரை கலைஞர் நூலகம் பிரம்மாண்டது என பதிவிட்டுள்ளதால், இந்த நூலகத்தின் திறப்பு விழா மதுரையைத் தாண்டி, தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் இதுவரை ஆசியாவிலேயே பிரம்மாண்ட நூலகமாகப் பார்க்கப்பட்டது. தற்போது அதைக் காட்டிலும் பிரம்மாண்டமாக மதுரை புது நத்தம் சாலையில் சர்வதேச தரத்துடன் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதில், ரூ.99 கோடி நூலகக் கட்டிடத்துக்கும், ரூ.10 கோடி புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கவும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தின் கீழ்தளம், தரைத் தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையின் சார்பில் 16 மாதங்களில் இக்கட்டிடப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள், மாணவர்கள் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலகத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழ் புத்தகங்கள், 2 லட்சத்து 75 ஆயிரம் ஆங்கிலப் புத்தகங்கள், 6 ஆயிரம் இ-புத்தகங்கள் வைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பழங்கால ஓலைச் சுவடிகள் காட்சிப்படுத்தப் படுவதைப் போன்று, இந்த நூலகத்திலும் பழங்கால ஓலைச்சுவடிகளை நூலகத்துக்குப் படிக்க வருவோருக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், இந்த பிரம்மாண்ட நூகலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொதுநூலகத்தைப் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது, 140 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்படும் இந்த பொதுநூலகத்தின் கீழ் 25-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் இயங்குகின்றன.
ஒவ்வொரு பருவத்துக்குமான நூல்களை வகைப்படுத்தி சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்வகித்து வருகிறார்கள். நூலக நிர்வாகத்தினருடன் உரையாடியபோது மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பிரம்மாண்டம் தான் என் கண் முன் விரிந்தது. சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விடவும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய பரப்பளவில் பிரம்மாண்டமாக மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி தமிழனாகப் பெருமையடைந்தேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சரின் இந்த டுவிட், மதுரையைத் தாண்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூலகம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT