Published : 05 Jul 2023 07:21 PM
Last Updated : 05 Jul 2023 07:21 PM
சிவகாசி: சிவகாசியில் பட்டதாரி இளைஞர்களால் தொடங்கப்பட்ட 5 ரூபாய் பாடசாலையில் பள்ளி மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி, ஓவியம், நடனம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளும் மாதம் ரூ.5 கட்டணத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் முயற்சி பல பட்டதாரி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
சிவகாசியில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காமராஜர் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தி அன்று காளிராஜ், சுரேஷ்பாபு ஆகிய இருவர், தங்களது நண்பர்களுடன் இணைந்து ‘கற்போம் - கற்பிப்போம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, ரைட் கிளப் பார் எஜுகேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினர்.
இந்த அமைப்பு சார்பில், ஏழை மாணவர் களுக்கு கல்வி மற்றும் கலைகளை கற்றுத் தரும் நோக்கில் மாதம் ரூ.5 கட்டணத்தில் பாட சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரத்தில் 5 நாட்கள் வகுப்பறை கல்வியும், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கல்வியும் அளிக்கப்படுகிறது. இது தவிர ஹிந்தி, ஆங்கில பேச்சு பயிற்சி, கணினி வகுப்பு, ஓவியம், சிலம்பம், அம்பு எய்தல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுகளும் கற்றுத் தரப்படுகின்றன.
மேலும், சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெற்றோரை இழந்து வறுமையால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத 43 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்விக் கட்டணம் இந்த அமைப்பு சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது. போதையில்லா சிவகாசியை உருவாக்கும் நோக்கில் காவல்துறையுடன் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் வாரம் தோறும் 10 மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளில் கல்வி மேளா நிகழ்ச்சியும், அவரது நினைவு நாளில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் அறிவியல் கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம், மாரத்தான், ஓவியக் கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா, மாறுவேடப் போட்டி, 2020-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் 15 ஆசிரியர்களை கண்டறிந்து ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தன்னார்வ ஆசிரியர்களான அமுதா, பத்மபாலா, அபர்னா ஆகியோர் கூறியதாவது: நாங்கள் படித்ததை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க 5 ரூபாய் பாடசாலையில் மாலை நேர வகுப்பு எடுத்து வந்தோம். மாணவர்களிடம் இருந்த ஆர்வம் காரணமாக, தற்போது முழு நேரமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
இங்கு கல்வி மட்டுமின்றி எங்களுக்கு தெரிந்த பிற கலைகளையும் கற்றுத் தருகிறோம். 75-வது சுதந்திர தின விழாவில் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் போல் மாணவர்கள் வேடமிட்ட நிகழ்ச்சி டிரம்ப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT