Published : 03 Jul 2023 04:00 PM
Last Updated : 03 Jul 2023 04:00 PM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் மீனவப் பெண்கள் கடலில் பாசி வளர்ப்பு மூலம் மாதம் ரூ.25 ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்வளம் குறைந்து வருகிறது. இதனால் மீனவர்கள் மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவப் பெண்கள் தங்களுக்குரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மீனவப் பெண்களுக்கு சிறந்த கடல்சார் மாற்றுத் தொழிலாக கடல் பாசி வளர்ப்புத் தொழில் உருவாகி உள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கஞ்சி பாசி, கட்ட கோரை பாசி, கப்பா பாசி ஆகியவற்றை வளர்த்து வருகின்றனர்.
சவுக்கு அல்லது மூங்கில்களை பயன்படுத்தி செவ்வக அல்லது சதுர வடிவில் மிதவைகளாகச் செய்து கொள்கிறனர். அவற்றின் மீது நார் கயிறு அல்லது நைலான் கயிறுகளில் பாசியின் நாற்றை பதியவைத்து அந்த மிதவைகளை கடலில் கல் நங்கூரம் துணையுடன் மிதக்க விடுகின்றனர். இதில் ஒரு கிலோ கடல் பாசியை கயிற்றில் கட்டி கடலில் மிதக்கவிடும்போது ஒன்றரை மாதத்துக்கு பின்பு அதிகபட்சமாக 10 கிலோ வரை வளர்ந்து விடுகிறது.
இந்த கடல் பாசிகளை கழுத்தளவு நீரில் நின்றபடி பெண்கள் அறுவடை செய்கின்றனர். பின்னர் அந்தப் பாசியை காய வைத்து, அதன் ரகத்துக்கு ஏற்ப கிலோ ரூ.70-லிருந்து ரூ.80 வரை விற்பனை செய்கின்றனர். ஒரு மாதத்துக்கு 300 கிலோ வரை கடல் பாசிகளை ஒரு மீனவப் குடும்பம் உற்பத்தி செய்து மாதம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடிகிறது.
உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய், ஐஸ் கிரீம், பால் பொருட்கள், ஜெல்லி, பானங்கள், நறுமணங்கள், கால்நடை, கோழி, செல்லப் பிராணிகளின் உணவுகள், விவசாய நிலங்களுக்கான இயற்கை உரம் ஆகியவற்றை தயாரிக்க இந்த கடல் பாசிகள் பயன்படுத்தப்படுகின்றன. கடல் பாசிக்கான தேவை அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர்.
இது தொடர்பாக கடல் பாசி வளர்ப்பில் ஈடுபடும் மீனவப் பெண்கள் கூறுகையில், `பாசி வளர்ப்புக்கான பயிற்சியையும், உபகரணங்களையும் மீன்வளத் துறை வழங்க வேண்டும். கடல் பாசி வளர்ப்பை வேளாண்மையாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலுக்கு வங்கிக் கடன், காப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றினால் மேலும் பல பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட முன்வருவார்கள்' என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT