Published : 30 Jun 2023 11:45 AM
Last Updated : 30 Jun 2023 11:45 AM
ஓசூர்: ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவரில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஓசூர் பேருந்து நிலையம் வழியாக பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ராயக்கோட்டை பிரிவு சாலையிலிருந்து தர்கா வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் சுவரில் திரைப்படங்களின் சுவரொட்டிகள், பிறந்த நாள் மற்றும் அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், விளம்பரங்கள் என எழுதப்பட்டுப் பார்க்க பரிதாபமாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இப்பாலத்தின் சுவரை அழகுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, ராயக்கோட்டை பிரிவு மேம்பாலம் பகுதியில் பெயின்ட் மூலம் அழகிய சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. இதில், ஓசூர் நகரைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா இடங்கள், வன உயிரினங்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அறிஞர்களின் பொன் மொழிகள், விழிப்புணர்வு வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இதில், கெலவரப்பள்ளி அணை ஓவியம் மக்களை ஈர்த்து வருகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: ஓசூரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுப் பார்க்க பரிதாபமாக இருந்த மேம்பால சுவர் தற்போது ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாலத்தின் எல்லா பகுதியிலும் இதேபோல ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த வேண்டும். மேலும், மேம்பாலம் கீழே குப்பை கழிவுகள் கொட்டப்பட்ட பகுதியைச் சுத்தம் செய்து, புல்வெளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT