Published : 26 Jun 2023 07:56 PM
Last Updated : 26 Jun 2023 07:56 PM
மதுரை: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால், பாம்புகள் மொத்தமாக படையெடுத்து வந்தாலும் நடுங்காமல் பிடித்து வனத்தில் விடுகிறார் சினேக் சகா என்ற ஆர்.சகாதேவன் (40). திருநகர் வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர். 8 வயதிலிருந்து பாம்பு பிடித்து வருகிறார். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். 80 முறை பாம்பிடம் கடியும் வாங்கியுள்ளார். நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் கடித்ததில் இரு முறை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
நல்ல பாம்பு கடித்த போது தவறான முதலுதவி சிகிச்சையால், விரலில் நஞ்சு தேங்கி அந்த விரல் துண்டிக்கப்பட்டது. குடியிருப்புகளில் அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து வனத்தில் விடுவது, அடிபட்ட பாம்புகளை கால்நடை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றுவது என பரபரப்பாக இயங்குகிறார்.
பாம்பு பிடிப்பதற்கு சகா பணம் வாங்குவதில்லை. இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறார். வேடர் புளியங்குளத்தில் மெக்கானிக் ஷாப் நடத்தும் அவர், பாம்பு பிடிக்க யாராவது அழைத்தால் உடனே சென்று விடுகிறார்.
இது குறித்து சினேக் சகா கூறியதாவது: எட்டு வயதிலிருந்து பாம்பு பிடித்து வருகிறேன். எனது தாத்தா பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்து கொடுப்பார். பாம்பு கடிக்கு ஆளானவர்கள், தாத்தாவிடம் சிகிச்சை பெற கடித்த பாம்புடன் வருவார்கள். அதிலிருந்து பாம்புகள் மீது ஈர்ப்பு உண்டானது. பாம்புகள் வந்தால் பிடிக்க தாத்தாவை அழைப்பார்கள்.
அவருடன் நானும் போவேன். அப்படி பாம்பு பிடிக்க தொடங்கியது தான். நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் பாம்புகள் கொடிய விஷமுள்ளவை. மற்றவை விஷம் இல்லா பாம்புகள். விஷப் பாம்புகள் கடித்தால் கடித்த இடத்தில் பாம்பின் பல் தடம் பதிந்திருக்கும். கடித்த இடத்தில் வலி, வீக்கம் இருக்கும். சிவந்து போயிருக்கும்.
நல்ல பாம்பு, கட்டு விரியன் கடித்தால் தலை சுற்றல், மயக்கம் வரும், நாக்கு செயலிழந்து போகும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். வாயிலிருந்து நுரைபோல் வெளியே வரும். கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் கடித்தால் கடித்த இடம் அதிக வீக்கம், வலி இருக்கும். நல்ல பாம்பு, கட்டு விரியன் கடித்தால் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திலும், கண்ணாடி விரியன், சுருட்டு விரியன் கடித்தால் 2 மணி நேரத்திலும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றால் உயிர் பிழைக்க முடியும்.
பாம்பு கடித்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக கயிறு கட்டக் கூடாது. அவ்வாறு செய்தால், பாம்பின் நஞ்சு குறிப்பிட்ட இடத்தில் தங்கி அந்த இடம் செயலிழந்து போய் அகற்ற வேண்டியது ஏற்படும். பாம்பு கடித்த இடத்தை பிளேடு கொண்டு கீறக் கூடாது, வாயை வைத்து நஞ்சை உறிஞ்சக் கூடாது. எந்த மருந்தும் தடவக்கூடாது.
பாம்பு கடித்த இடத்தை அசைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். பதறி ஓடக்கூடாது. பதற்றம் இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். யாரையாவது உதவிக்கு அழைத்து கைத்தாங்கலாக நடக்கலாம். பின்னர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கடிபட்ட பாம்பை கொண்டு சென்றால் தான் சிகிச்சை பெற முடியும் என்றில்லை.
ரத்தப் பரிசோதனை செய்தாலே எந்த பாம்பு கடித்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனால் கடித்த பாம்பை தேடி அலையாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பாம்பு கடித்த உடனே உயிர் போய் விடாது. பயம் தான் உயிரைப் போக்கும். பயம் இல்லாமல் இருந்தால், எந்த பாம்பு கடித்தாலும் உயிர் பிழைத்துவிடலாம். பாம்புகளை கொல்லக்கூடாது. பாம்புகளும் வாழ வேண்டும். மக்களும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாம்புகளை பிடிப்பதுடன் வனத்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு பாம்பு பிடி பயிற்சி, பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? எப்படி முதலுதவி வழங்க வேண்டும்? என ஊர் ஊராகச் சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் சினேக் சகா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT