Published : 22 Jun 2023 04:43 PM
Last Updated : 22 Jun 2023 04:43 PM
திருப்பத்தூர்: போளூர் ஏரிக்கரையில் கி.பி.8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால நடுகல்லும், தாய் தெய்வச் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி தலைமையில், ஆங்கிலத் துறைப் பேராசிரியர் மதன் குமார், காணிநிலம் முனிசாமி, செங்கத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியர் மாணிக்கம் ஆகியோர் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, போளூர் அருகே மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் கால நடுகல் ஒன்றையும், தாய்த் தெய்வச் சிலை ஒன்றையும் அக்குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
இது குறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது: ''திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்குப்புறம் பகுதியில் உள்ள மலையில் லஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் போளூர் பெரிய ஏரியின் கிழக்குக் கரையில் 'பொங்கல் பிரியன்' என்ற பெயரில் பல குடும்பங்களின் குலத்தெய்வமாக பல்லவர் கால நடுகல் ஒன்று வணங்கப்படுவதை நாங்கள் கள ஆய்வு மூலம் கண்டறிந்தோம். இந்த சிலையானது 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட அழகான பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லின் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பை எய்யும் கோலத்தில் குதிரையில் அமர்ந்த கோலத்தில் நடுகல் வீரன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வீரனின் வலது பக்கப் பின்தோள் பகுதியில் அம்புக் கூடு ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீரனின் தோற்றமும் குதிரையின் தோற்றமும் மிக, மிக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சேனம், கடிவாளத்துடன் குதிரையின் தோற்றம் உள்ளது. குதிரையின் முன்னங்கால்களுக்கு முன்னர் சிறிய நாய் உருவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுகல் என்பது தன் நாட்டையோ, ஊரையோ பகைவர்களிடம் இருந்து பாதுகாத்து உயிர்விட்ட வீர மறவர்களுக்கு நடுவது மரபு. இங்குக் காணப்படும் நடுகல் வீரனும் போர்க் கோலத்தில் பகைவர்களிடம் இருந்து தன் நாட்டைப் பாதுகாத்து உயிர்விட்டவர் என கருதப்படுகிறது. அந்த வீரனின் வளர்ப்பு நாயும் போரில் பங்கு கொண்டு எதிரிகளை வீழ்த்தி இருப்பது இதன் மூலம் தெரிகிறது. நடுகற்களில் நாய்கள் இடம் பெறுவது அரிதினும் அரிதாகவே காணப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், எடத்தனூர் என்னும் ஊரிலும், திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் மேல்பட்டு மற்றும் வாணியம்பாடி வட்டம், அம்பலூர் பகுதிகளில் நாய்களுக்கான நடுகற்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாய் உருவம் கொண்ட இந்த நடுகல்லும் சிறப்புடையது.
இந்த நடுகல்லுக்கு அருகாமையில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த தாய்த் தெய்வச் சிலை ஒன்றும் காணப்படுகிறது. இதுவும் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த சிலையானது 3.5 அடி உயரமும் 2 அடி அகலமும் உள்ள பலகைக் கல்லில் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த தெய்வமானது வலது காலை தொங்க விட்டும் இடது காலை மடித்த கோலத்திலும் அமர்ந்துள்ளது. காதுகளில் குண்டலம், தலையில் மூன்றடுக்குக் கிரீடத்துடன் காணப்படுகிறது. வலது கை அபய முத்திரையைக் காட்டி அருள் பாலிக்கிறது. இடது கையானது இடது கால் மீது வைத்தபடி சிற்பத்தின் அமைப்புள்ளது.
இந்த இரண்டு சிற்பங்களும் கி.பி. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இவை 1,200 ஆண்டுகள் பழமையுடையவை. போளூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் குலதெய்வமாக இச்சிலைகள் உள்ளன. காது குத்தல் உள்ளிட்ட சடங்குகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT