Published : 22 Jun 2023 07:30 PM
Last Updated : 22 Jun 2023 07:30 PM
கூடலூர்: நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குவது தேயிலை, மலைக் காய்கறி விவசாயம். சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலையும், 7 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறியும் பயிரிடப்படுகிறது.
அதில், கேரட் 2,200 ஹெக்டேரிலும், உருளைக் கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும், மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகின்றன. மலையகத்தின் சமவெளி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாகற்காய், மேரக்காய், பயறு வகைகள், பஜ்ஜி மிளகாய், தேயிலை, காஃபி முதல் நெல், வாழை வரை அனைத்து வகையான பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்திருப்பதால், அந்த இரு மாநிலங்களின் சந்தை தேவைகளுக்கு ஏற்ப சுழற்சி முறையில் பயிர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கூடலூர் பகுதியிலுள்ள விவசாயிகளால் அறுவடை செய்யப்படும் காய்கறி வகைகள் பெரும்பாலும் அண்டை மாநிலமான கேரளா விலுள்ள வியாபாரிகளுக்கு மொத்தமாக வழங்கப்படுகிறது.
விலை குறையும் காலங்களிலும் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாததால், குறைந்த விலைக்கு விற்பனை செய்து நஷ்டமடைந்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு உதவ தோட்டக்கலைத் துறை முன்வந்துள்ளது. சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சார்பில், கூடலூர் உழவர் சந்தையில் புதிதாக சூரிய ஒளி குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் ஐந்து மெட்ரிக் டன் வரையிலான (ஐந்தாயிரம் கிலோ) விளை பொருட்களை இருப்பு வைத்து, தேவையான நேரத்தில் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனால், விவசாயிகள் விளை பொருட்களை மலிவான விலைக்கு வியாபாரிகளுக்கு அளித்து நஷ்டமடைவது தடுக்கப்படும். தோட்டக்கலைத் துறையினரின் இந்த நடவடிக்கையை விவசாயிகள் பாராட்டியுள்ளனர்.
வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "இதேபோல, கூடலூர் உழவர் சந்தையில் 20 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து கொள்ள ஏதுவாக, தங்களின் சிட்டா அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, புகைப்படத்துடன் கூடலூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர்களை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை உழவர் சந்தை மூலமாக நேரடியாக மக்களுக்கு விநியோகம் செய்து நல்ல லாபம் பெற முடிவதோடு, பொதுமக்களுக்கும் தரமான காய்கறி வகைகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, இப்பகுதியிலுள்ள சிறு, குறு விவசாயிகள் உழவர் சந்தையை பயன்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT