Published : 20 Jun 2023 01:17 PM
Last Updated : 20 Jun 2023 01:17 PM
விருதுநகர்: கீழடியைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடந்துவரும் அகழாய்வுகளால், வைப்பாற்றங்கரையில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகத்தின் வரலாறு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கீழடி, சிவகலை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய அகழாய்வுகளுடன் புதிதாக விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை, திருநெல்வேலி துலுக்கர்பட்டி, தருமபுரி பெரும்பால என மொத்தம் 7 இடங்களில் அறிவியல் அடிப்படையில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் தற்போதைய நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. விருதுநகர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் வெம்பக்கோட்டையிலும் முதலாம் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வுகளில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: வெம்பக்கோட்டையில் அதிக அளவிலான நுண்கற் கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் கிடைத்துள்ளன. வைப்பாற்றின் வடக்கு கரையோரம் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் தொல்லியல் அறிஞர் வேதாசலம் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரால் கண்டெடுக்கப்பட்டன.
அர்ச்சுனா நதி, அனுமன் நதி, குண்டாறு, தேவியாறு, மற்றும் வைப்பாறு போன்ற ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள இடங்களில் கடைக்கற்காலத்தைச் சேர்ந்த நுண்கற் கருவிகள் இன்றளவும் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கி.மு. 4000 முதல் கி.மு. 3000 வரையிலான இடைப்பட்ட காலத்தில், இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து உள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் நிரூபிக்கின்றன.
கடலில் கிடைக்கும் கிளிஞ்சல்களால் செய்யப்பட்ட கை வளையல்கள் மற்றும் யானையின் கடை வாய்ப்பல் ஒன்று கல்லாக மாறி புதைபடிம வடிவில் இங்கு கிடைத்துள்ளது. 1863-ம் ஆண்டில் ராபர்ட் புரூஸ் பூட் என்ற வெளிநாட்டு அறிஞர், விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் பழைய கற்கால சில்லுக் கருவியை கண்டறிந்துள்ளார்.
சங்க காலத்தை சேர்ந்த கருப்பு- சிவப்பு மண்பாண்ட ஓடுகள் மற்றும் இரும்பு பொருட்களும், வெம்பக்கோட்டையைச் சுற்றியுள்ள மேடான பகுதிகளின் மேற்பரப்பில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறிப்புடன் கூடிய மட்பாண்ட ஓடுகளும் கிடைத்து வருகின்றன.
இதன் மூலம் இங்கு வாழ்ந்த தமிழ்ச் சமூக மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளதை உணர முடிகிறது. ரோமானிய மட்பாண்ட ஓடுகளும் இங்கு அதிகமாக கிடைப்பதால் இங்குள்ள மக்கள் ரோமானியர்களோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிய முடிகிறது. மேலும், 1574-ம் ஆண்டில் எழுதப்பட்ட செப்பேடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதில், வெம்பக்கோட்டையைச் சேர்ந்த புல்லா கவுண்டர் என்பவர், அதிவீரராம பாண்டியனின் பண்டாரத்தில் வாதாடி இனவரி இல்லாமல் தடுத்துள்ள செய்தி இச்செப்பேட்டில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் நடந்து வரும் அகழாய்வில் கிடைத்த சுமார் 3 ஆயிரம் பொருட்கள் இங்கு கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தினந்தோறும் ஏராளமானோர் அவற்றை வியந்து பார்வையிட்டு செல்கின்றனர். இக்கண்காட்சியை பார்வையிட வரும் மக்களுக்காக வெம்பக்கோட்டையிலிருந்து இலவச அரசு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இக்கண்காட்சி கடந்த 13ம் தேதியுடன் முடிந்தது.
தற்போது பள்ளிகள் திறந்துள்ள நிலையில் மாணவ, மாணவியரை இந்த தொல்பொருள் கண்காட்சியை பார்வையிட அழைத்துவர ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே கண்காட்சியை ஓரிரு மாதங்கள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT