Published : 19 Jun 2023 04:47 PM
Last Updated : 19 Jun 2023 04:47 PM
கோவை: அரிவாள் ரத்தசோகை நோய் (sickle cell anaemia) என்பது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் உள்ள குளோபின் புரதச் சங்கிலியில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுவது ஆகும். இது ஒரு மரபணு நோய் ஆகும். இந்நோய் குறித்தும், அதற்கான சிகிச்சை, தடுப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 19-ம் தேதி அரிவாள் ரத்த சோகை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக நடப்பாண்டுக்கான கருப்பொருளை ‘அரிவாள் ரத்தசோகை நோய் அமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு’ (Global Alliance of Sickle Cell Disease Organizations) அறிவித்துள்ளது.
அவை, நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சமுதாய கட்டமைப்பை வலுப்படுத்துதல், பிறந்த குழந்தைகளுக்கு நோய் அறிவதற்கான ரத்த பரிசோதனை செய்தல், நோயின் தன்மை குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவை ஆகும்.
இந்நோய் குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவத்துறை தலைவரும், பேராசிரியருமான சிவக்குமார் கூறியதாவது: ரத்தசோகைதான் இந்நோய்க்கான் தொடக்கப்புள்ளியாகும். சாதாரண நிலையில் இருக்கும்போது, அரிவாள் ரத்த அணுக்கள் மண்ணீரலுக்கு செல்லும்போது, அங்கே அழிக்கப்படுகிறது.
இதனால், ரத்த சோகை ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி குறைபாடு, நோய் தொற்று ஏற்படும். ரத்த அணுக்கள் அதிக அளவில் சிதைவு ஏற்பட்டால் மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயுள்ளவர்களுக்கு ஆக்சிஜன் குறைபாடு, நீரிழப்பு, காய்ச்சல் ஏற்படும்போது, இயல்பான தட்ட வடிவுடைய ரத்த அணுக்கள், அரிவாள் வடிவத்துக்கு மாறி, சிறு, நுண் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்திவிடும்.
இதனால் எலும்பு வலி, நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், கை, கால் விரல்களில் அழுகல் ஏற்படும். இதற்கு உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம். இல்லையெனில், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நோயை கண்டறிந்து உறுதிப்படுத்த ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரோசிஸ் பரிசோதனை உள்ளது.
குழந்தை பருவத்தில் இந்நோயை கண்டறியலாம். இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்யும்போது தங்கள் சந்தியினருக்கும் நோய் வராமல் இருக்க, மரபணு பரிசோதனை, ஆலோசனை செய்துகொள்ள வேண்டும். அரிவாள் ரத்தசோகை நோய்க்கு குருத்தணு மாற்று சிகிச்சை மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையை இலவசமாக பெறலாம். இவை இல்லாத பட்சத்தில் இந்நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பீட்டல் ஹீமோகுளோபினை (Hb F) அதிகப்படுத்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், ஓரின நோய் எதிர்ப்பான்கள் (Monoclonal Antibolies) சிகிச்சையும் தரப்படுகிறது.
இந்நோய் உள்ளவர்கள் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். இந்த நோய் உள்ள இளம் வயதினர் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ரத்தசோகையை சரிசெய்ய, மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தம் ஏற்றிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று - ஜூன் 19 - உலக அரிவால் ரத்த சோகை விழிப்புணர்வு தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT