Published : 19 Jun 2023 09:06 AM
Last Updated : 19 Jun 2023 09:06 AM
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் குழந்தையின் நான்கு வளையங்களை கொண்ட வெண்கல வளையல் மற்றும் வெண்கல காப்புகள் இருந்தன.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், கத்தி, இரும்பு வாள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சிறிய முதுமக்கள் தாழியை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்தனர். சுமார் 30 செ.மீ., அகலம் மற்றும் 58 செ.மீ., உயரம் கொண்ட இந்த தாழி வளைந்த நிலையிலும், விரல் தடம் பதித்த வாய் பகுதியை கொண்டதாகவும் இருந்தது. உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு இருந்தது.
மேலும், நான்கு வளையங்களை கொண்ட வெண்கல வளையல்கள் இருந்தன. இந்த வளையல்கள் 3.5 செ.மீ. விட்டம், 0.2 செ.மீ. கன அளவு, 22 கிராம் எடையுடன், அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளும் வடிவில் உள்ளன. ஈமத்தாழி, மண்டை ஓடு, வளையல்கள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது, இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தையுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கல காப்பு கிடைத்தது. காட்சிப்படுத்தப்படும்: மேலும் குவளை, கிண்ணம், தட்டு போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்தன.
22 செ.மீ. நீளமுள்ள இரும்பாலான குறுவாள், 5.5 செ.மீ. விட்டம், 0.5 செ.மீ. கன அளவு, 24 கிராம் எடை கொண்ட இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் வைக்கப்பட்டிருந்தன. இவையும் அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிச்ச நல்லூரில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் இந்த பொருட்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படும் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT