Published : 18 Jun 2023 02:34 PM
Last Updated : 18 Jun 2023 02:34 PM
கோவை: முக்கியத்துவம் வாய்ந்த கோவை மாநகரில் பல்வேறு பழமை வாய்ந்த இடங்கள், நகர்களின் பட்டியலில் கோவைப்புதூருக்கு முக்கிய இடம் உள்ளது. கோவைப்புதூர் உருவான தினம் நாளை (ஜூன் 19) கொண்டாடப்பட உள்ளது.
காந்திபுரத்தில் இருந்து ஏறத்தாழ 12 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த, மலையடிவாரப் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது கோவைப்புதூர். பாலக்காடு சாலை, சுண்டக்காமுத்தூர் சாலை, பேரூர் சாலை வழியாக கோவைப்புதூருக்கு வழித் தடங்கள் உள்ளன.
தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் துறை அதிகாரியும், கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவருமான ஹரிஹரன் கூறியதாவது: கோவையில் ஒரு காலத்தில் சுண்டக்காமுத்தூர் கிராமப் பகுதி புகையிலை விவசாயத்தில் பிரசித்தி பெற்ற இடமாக இருந்தது. அந்த சமயத்தில் கோவைக்கு அருகே கோவைப்புதூர் பகுதி செம்மண் களமாக இருந்தது.
இங்கு குடியிருப்பை ஏற்படுத்தி,நகரை விரிவுபடுத்த அரசு நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். அந்த சமயத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக கோவை வீட்டுவசதி வாரியத்தால், சுண்டக்காமுத்தூர் அருகே மலையடிவாரத்தில் ஏறத்தாழ 280 ஏக்கர் நிலம் குடியிருப்புக்காக பல்வேறு துறைகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 1964-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் கோவைப்புதூர் குடியிருப்புப் பகுதியை ஏற்படுத்தும் திட்டப்பணியை தொடங்கி வைத்தார். இதை நினைவுபடுத்தும் கல்வெட்டும் கோவைப்புதூர் பகுதியில் தற்போது உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளுடன் அன்று காணப்பட்ட கோவைப்புதூர் பகுதி, இன்று நகரில் தவிர்க்க முடியாத முக்கிய இடமாக மாறிவிட்டது.
ஏறத்தாழ 3,500 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து இப்பகுதி காணப்படுகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. கோவைப்புதூரின் ஒரு பகுதியில், 1972-ல் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, 1974-ல் அஞ்சல் அலுவலகம், 1986-ல் தொலை தொடர்பு சேவை, 1981-ல் தனி மின்வாரிய அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. 1976-ல் புனல் வடிவத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. கோவைப்புதூர் நகரம் தொடங்கி 59 ஆண்டுகள் ஆகின்றன, என்றார்.
கோவைப்புதூர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் வி.ராஜய்யா கூறும்போது, ‘‘முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டிய தினத்தை கோவைப்புதூர் தினமாக கொண்டாட முடிவு செய்தோம். முன்பு இங்கு கோவைப்புதூர் ஹவுசிங் யூனிட் இருந்தது. பின்னர், சிறுவாணி நகர், அலமு நகர், பாரதி நகர் என நிறைய பகுதிகள் உருவாகின.
திட்டமிட்ட நகராக கோவைப்புதூர் உருவாக்கப்பட்டது. கோவைப்புதூர் குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன், இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் இணைந்து நடப்பாண்டு கோவைப்புதூர் உருவான தினத்தை கொண்டாடு கிறோம். கோவைப்புதூர் உருவான தினத்தையொட்டி, கோவைப்புதூர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நேற்றும் (சனிக்கிழமை), இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவைப்புதூர் தினத்தையொட்டி மாரத்தான் போட்டி, 20 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டி, தடகளப் போட்டி, ஓவியப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT