Last Updated : 18 Jun, 2023 02:05 PM

1  

Published : 18 Jun 2023 02:05 PM
Last Updated : 18 Jun 2023 02:05 PM

'தந்தையே துணை’ - ஓவியர் மணியம் செல்வன் சிறப்புப் பேட்டி | Father's Day Special

ஓவியர் மணியம் செல்வன்

மணியம் என்றாலே அனைவருக்கும் தெரியும். அவருடையை அற்புதக் கோடுகள் உருவாக்கிய உயிரோவியங்களில் மயங்காதவர்களே இல்லை. ஓவியர்கள் பலரும் அவருடைய கோடுகளில் உயிர்ப்பெற்ற ஓவியங்களைப் போல தங்களுக்கும் ஒரு கேரக்டர் கிடைத்து அதனை வரைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் அனைத்து கேரக்டர்களுக்கும் உயிர் கொடுத்தவர் ஓவியர் மணியம். அவரின் மகன் மணியம் செல்வனிடம் தனது தந்தை பற்றி பேசினோம். அவர் நெகிழ்ந்து பேச ஆரம்பித்தார்.

"ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை நூலகர்களும், புத்தகத்தைப் படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களும் பத்திரமாக பாதுகாக்கவும்" - `பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் ராஜாஜி இவ்வாறு கூறியிருப்பார்.

எனது தந்தை நான் ஓவியராக வர வேண்டும் என்று நினைத்தாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எனக்கு நேரடியாக தனது ஓவிய கற்பித்தலை தெரிவிக்கவில்லை. மாறாக, பெயிண்ட் மிக்ஸிங் செய்யும்போது தண்ணீர் எடுத்து மாற்றி வைக்கச் சொல்வது, பிரஸ் எடுத்து தரச் சொல்வது, மிகவும் பிரபலமான ஓவியர்களின் ஓவியங்களைக் காணச் சொல்வது போன்று எல்லா விஷயங்களிலும் மறைமுகமாக மவுனகுருவாக இருந்து அந்தக் காலத்திலேயே என்னை தயார் செய்திருக்கிறார் என்பதாகத்தான் இன்று நான் உணர்கிறேன்.

எல்லாருக்கும் தந்தை குருதான். ஆனால், எனக்கு தொழில் ரீதியாகவும் தந்தையே குருவாக கிடைத்தார். அது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கொடுப்பினை.

ஆனால் அவருக்குக் கிடைத்த குரு கல்கி. அவர் தானாக அமைந்த குரு. கல்லூரி முடித்ததும் அந்த குருவை பார்க்கக்கூடிய வாய்ப்பு அப்பாவுக்கு கிடைத்திருக்கிறது. எந்த ஒரு பணிக்கும் ஒரு நல்ல குரு கிடைப்பது சீடனுக்கு சந்தோஷம். ஒரு நல்ல சீடன் கிடைப்பது குருவுக்கும் பெரிய விஷயம். அது பெரிய பாக்கியம்தான்.

கல்கி சாருக்காக மணியம் ஓவியர் ஆனாரா? இல்லை ஓவியர் மணியத்துக்காக கல்கி சார் கதையை எழுதினாரா? என்று இப்போதும் நினைத்துப் வியந்துப் பார்க்கிறேன். அதை பிரமிப்பாகப் பார்க்கிறேன்.

நான் இந்த ஓவியத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், ஒரு ஓவியராக இப்போதும் அப்பாவின் ஒவ்வொரு ஓவியங்களை எடுத்துப் பார்க்கும்போது அதன் தனித்துவம் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விஷயங்களை உணர்த்துவதை உணர்கிறேன். அது எனக்கு ஆச்சர்யம் தருகிறது. பார்க்கப் பார்க்க சலிப்பு தட்டுவதே இல்லை. அது கலைகளில் மிகப்பெரிய விஷயம்.

அப்பா தன்னுடைய 44 வயதில் இறந்துவிட்டார். அப்போது எனக்கு வயது 18. அப்பா இறப்பதற்கு முந்தைய ஒரு வருடத்துக்கு முன்புதான் எனக்கு நேரடியாக ஓவிய பயிற்சி கொடுத்தார். மணியம் செல்வன் என்கிற பெயரை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு லோகோ அடையாளத்துடன் எழுதிக் கொடுத்தது அப்பாதான். அப்பாவுடைய குருகுல வாசம் என்று எடுத்துக்கொண்டால் கல்கி சாருடனான 1941 முதல் 1955 வரை இருந்தது. 1955வது வருடத்தில் கல்கி சார் இறந்துவிட்டார். இந்தப் பயணத்தில் கிட்டத்தட்ட 14 வருடங்கள் அவர்கள் இருவரும் இணைந்து செய்துவந்த பணிகள் அத்தனையும் பொக்கிஷங்களாகி நிற்கிறது. ஒரு தொடர்கதைக்காக கதாசிரியர் ஒருவர், இளம் ஓவியர் ஒருவரை அஜெந்தா, இலங்கை போன்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று பயணித்து, அந்தச் சூழலை அனுபவித்து ஓவியமாக வரைய செய்வது என்பது தனி சிறப்புடையது. ஒரு ஓவியன் களத்திற்கு அழைத்து ஊக்குவித்தது கல்கி சார். அவர் இல்லையென்றால் இன்றைக்கு மணியம் இல்லை.

ஓவியர் மணியம் தன் கதையினூடே தான் நினைக்கும் மனிதர்களை ஓவியத்தில் அச்சுப் பிசகாதவாறு வரைவது என்பது தனித்துவம்மிக்கதுதான். அதற்கு முதலில் கதையாசிரியருக்கும் ஓவியருக்குமான மன ஓட்டம் எந்த அளவில் சரியாக சம அளவில் இயங்கியிருக்கிறது என்பது இப்போது நினைத்தாலும் பெரும் வியப்புதான்.

ஓர் ஓவியனாக அந்த அந்த இடங்களில் நேரடியாகப் பயணப்பட்டு ஆராய்ந்து கற்றுக்கொண்டு, அந்த மண்ணின், மனிதர்களின் வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் உள்வாங்கி, அனுபவித்து வரையும் ஓவியனின் ஓவியம் தான் தனித்துவ ஓவியமாக வரும் என்பது அப்பாவின் தனித்துவமான அறிவுரை. இதைத்தான் அப்பா எப்போதும் சொல்வார்.

நாம் ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டு இதுதான் படம்னு நாம் நினைத்துக்கொள்வோம். ஆனால் வாசகர்கள் இருக்கிறார்களல்லவா? அவர்கள் அவ்வளவு சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களும் தங்களுக்கென்று ஒரு கற்பனையை வைத்திருப்பார்கள். அதனுடன் நம் ஓவியம் ஒன்றி பயணிக்க வேண்டும். அதுதான் பெரிய விஷயம். அதுவும் ஓர் ஓவியன் என்பவன் என்சைக்ளோப்பீடியோ போல் இருக்க வேண்டும். எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவனுக்குத் தெரியாததே இருக்கக்கூடாது என்றும் சொல்வார். அப்போதுதான் எழுத்தின் மூலம் வரும் உருவாக்கத்தில் கிடைக்கும் படமாக உயிர் கொடுக்கும்போது அது உயிரோட்டம் பெற்றதாக இருக்கும். அதற்காக ஒவ்வொரு சூழலையும் அவன் நேரே போய் அனுபவித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு ஓவியன் தன் படத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். அதற்காக ரொம்ப உயிர் கொடுக்கிறேன் என்று அதன் உயிரை எடுத்து விடக்கூடாது என்று நகைச்சுவையாக தெரிவித்தாலும் அதில் அவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை ஓவியராக உணர்கிறேன். நாம் வரையும் ஓவியங்களில் ஒரு நிறைவு இருந்தால்தான் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தந்தவர் அப்பாதான்.

ஓவியர் மணியம்

எல்லா ஓவியங்கள் வரையும் போது, என் தந்தை குருவே துணைன்னு போடுவார். நான் எனது தந்தை மறைவுக்குப் பிறகு தந்தையே துணை என்று போட்டுத்தான் வரைகிறேன்.

பொதுவாக ஓவியர்களின் வாழ்வில் கற்பனை வளத்துக்கு குறைவு இருக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் கடந்த காலத்துக்கும் பயணிக்க வேண்டும். நிகழ்காலத்துக்கும் பயணிக்க வேண்டும். தாங்கள் வரையும் ஓவியங்களில் கதையின் படி, வரையப்பட்ட ஒரு குமரிப் பெண்ணின் வயதை இரண்டு வயது கூட்டிக் காட்ட வேண்டும் என்ற சூழழில், இன்னும் இரண்டு ஸ்டோர்க் கொடுத்தால் அந்தப் பெண்ணின் வயதைக் கூட்டி காட்ட முடியும். வயது ஏறினால் இந்த முகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் உறுதியாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும்.

என் அப்பா வரையும் ஓவியத்தில், முழு மன நிறைவு வரவில்லை என்றால் அதனை கொடுக்க மாட்டார். திரும்பவும் வரைவார். அந்த அளவுக்கு வேலையில் நிறைவைத் தேடிக் கொண்டிருக்கக் கூடியவர். அதனை நானுமே அவரிடம் ஒரு பாடமாக கற்றுக் கொள்கிறேன்.

தற்போது ஓவியர்களின் வருகை மிகவும் குறைவாக இருக்கிறது. அது வருத்தம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஓவியத்துறையில் எனக்கு அப்புறம் அரஸ் வந்தார். இப்போது ஸ்யாம் இருக்கிறார். இவர்கள் சொல்கிற அளவில் மிகவும் அழகாக பண்ணுகிறார்கள்.

எனது தந்தையின் நூற்றாண்டு விழா வரும் டிசம்பரில் வருகிறது. அதில் என்னாளான அளவில் எளிமையாக எடுத்துச்செல்ல விரும்பியிருக்கிறேன். அதேநேரத்தில் இந்த வருடத்தில் எனது தந்தையின் நினைவினை நான் நினைத்துப் பேச இந்த தந்தையர் தினம் அமைந்திருப்பதே மிகவும் மகிழ்ச்சி. முக்கியமாக வாழும் காலத்தில் தாய், தந்தையை அன்போடு பாதுகாத்து அவர்களை எல்லாவிதத்திலும் நாம் கொண்டாட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x