Published : 17 Jun 2023 07:00 PM
Last Updated : 17 Jun 2023 07:00 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆல்பட்ட விடுதி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய தர்மச் சக்கரத்தை காரைக்குடியைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் தி.பாலசுப்பிரமணியன் கண்டறிந்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: “கலசங்குடி சித்திரைவேலு, இலந்தக்கரை ரமேஷ் ஆகியோர் கொடுத்த தகவல்படி, இங்கு ஆய்வு செய்தபோது தர்மச் சக்கரம் கிடைத்தது. அது 8 ஆரங்களுடன் ஒரு தாங்கியில் உள்ளது போன்று காணப்படுகிறது. சக்கரத்தின் மேற்புறம் ஒரு நெருப்பு சுடர் போன்று உள்ளது.
ஆரங்கள் ஞானம் அடைதல், சரியான பார்வை, நல்ல எண்ணம், பேச்சு ,செயல், வாழ்வாதாரம், முயற்சி, நினைவாற்றல் ஆகிய 8 வகையான புத்தரின் பாதையை குறிக்கும். அதிலுள்ள வட்ட வடிவம் தர்ம போதனைகளையும், மையப் பகுதி தார்மிக ஒழுக்கம், ஞானத்தையும், சக்கரத்தின் சுழற்சி மனிதனின் பிறப்பு, இறப்பையும் குறிக்கும்.
பழங்காலம் தொட்டே, தமிழக மன்னர்களிடம் நிலங்களை தானம் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. தர்மச் சக்கரம் புத்த மத வழிபாட்டுக்கு நிலம் தானம் கொடுக்கப்பட்டதை குறிக்கும். இதன்மூலம் இப்பகுதியில் 10-ம் நூற்றாண்டில் புத்த துறவிகள் வந்து தங்கியுள்ளனர்.
அவர்களை மன்னர்கள் ஆதரித்ததோடு, வழிபாட்டுக்காக நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஏற்கெனவே இக்கிராமம் அருகேயுள்ள மல்லலில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT