Published : 15 Jun 2023 06:33 PM
Last Updated : 15 Jun 2023 06:33 PM
தஞ்சாவூர்: சில ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மைத் துறையினரால் மானியம் வழங்கி அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாய் நாற்றங்கால்' தயாரிப்பு முறையில் மேற்கொள்ளப்படும் ஒற்றை நடவுக்கு காலம் - செலவு குறைவு, மகசூல் அதிகம் என்பதால், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவை சாகுபடியில் பெரும்பாலும் 110 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களையும், சம்பாவில் மத்திய மற்றும் நீண்டகாலமான 150 முதல் 165 நாட்கள் வயதுடைய நெல் ரகங்களையும் விவசாயிகள் தேர்வு செய்து சாகுபடி செய்கின்றனர்.
அறுவடையின்போது மழைக்காலங்களில் சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் அதற்கு ஏற்றாற்போல காலத்தை நிர்ணயம் செய்துகொண்டு, குறுகிய கால நெல் ரகத்தை தேர்வு செய்து, சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல் சாகுபடியில் முன்பு நாற்றங்கால் தயாரித்து, விதைத்து, 30 நாட்கள் கழித்து நாற்றைப் பறித்து, வயலில் மற்றொரு இடத்தில் நடவு செய்து வந்தனர். வேளாண்மையில் ஏற்பட்ட இயந்திர புரட்சியால், நாற்றங்கால் தயாரிப்பிலும் புதுமைகள் புகுத்தப்பட்டன. அவ்வாறு அறிமுகப்படுத்தப் பட்டது தான் ‘பாய் நாற்றங்கால்' முறை.
தயாரிப்பு எளிது: பாய் நாற்றங்கால் தயாரிப்பு மிக எளிதானது. இந்த முறையில், பாலிதீன் பேப்பரை பாய்போல விரித்து, அதில் மண், உரம் பரப்பி, பாத்தி பாத்தியாக விதைநெல்லை விதைத்து, 17 நாட்கள் கழித்து, கேக் வெட்டி எடுப்பதுபோல நெல் நாற்றுப் பயிரை எடுத்து இயந்திரம் அல்லது ஆட்கள் மூலம் ஒற்றை நடவு செய்யப்படுகிறது. இதனால் வேலை நேரம் குறைவதுடன், நாற்று பறிப்பது, நடவுக்கான கூலியும் ஓரளவு குறைகிறது.
பாய் நாற்றங்காலில் உருவான நெற்பயிரை இயந்திரம் மூலம் நடவு செய்யும்போது, எலிவெட்டு இருக்காது. நேர் சீராக, இடைவெளிவிட்டு ஒற்றை நடவு செய்யப்படுவதால், பயிர்கள் அதிக தூர்கள் விட்டு வளரும். மழை, காற்று போன்ற நேரங்களில் கீழே சாயும் வாய்ப்பும் குறைவு. அதிக காற்றோட்டம், வெளிச்சம் இருப்பதால் கையால் நடவு செய்வதைக் காட்டிலும் இயந்திர நடவில் மகசூல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த முறை விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
70 சதவீதம் பாய் நாற்றங்கால்: பாய் நாற்றங்கால் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோது, இயந்திரம் மூலம் நடவு செய்ய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.500 மானியமாக வழங்கி அரசு ஊக்கப்படுத்தியது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் விவசாயிகள் இந்த பாய் நாற்றங்கால் முறையை கடைப்பிடிப்பதால், நடவு மானியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல தேவையான விதைகள், உரங்களை விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் விநியோகம் செய்துவருகின்றனர். இதில் 70 சதவீத பரப்பளவு பாய் நாற்றங்கால் மூலம் நடவு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் செலவு அதிகரித்துள்ளதால், நிறுத்தப்பட்ட மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1.82 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 79 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆயிரம் ஏக்கரில் நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. ஜூலை இறுதிக்குள் குறுவை நடவுப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும்.
தற்போது வரை 60 சதவீத வயல்களில் பாய் நாற்றங்கால் முறையே பின்பற்றப்பட்டுள்ளது. இந்த குறுவை பருவத்தில் கோ 51, சிபிஎஸ் 5, அம்பை 16, ஆடுதுறை 36 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து வருகின்றனர். நாற்று பறிக்கும் கூலி, நடவு கூலி மீதமாவது, சாகுபடி காலம் குறைந்து, மகசூல் அதிகரிப்பது ஆகியவற்றால், தற்போது பெரும்பாலான விவசாயிகள் பாய் நாற்றங்கால் முறையைதான் அதிகம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வட்டாரங்களில் பெரும்பாலான இடங்களில் பாய் நாற்றங்கால் சாகுபடிதான் செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்ற இந்த நடவு முறையால் மகசூலும் கூடுதலாகி வருகிறது. இந்த திட்டம் தொடங்கும்போது விவசாயிகளை ஊக்கப்படுத்தவே நடவு மானியம் வழங்கப்பட்டது. தற்போது இந்த முறை பரவலாகிவிட்டதால் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT