Published : 10 Jun 2023 03:08 PM
Last Updated : 10 Jun 2023 03:08 PM
மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்கா புனித தலத்துக்கு நடந்தே சென்றுள்ளார் இளைஞர் ஒருவர். 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் அவர் கடந்துள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. அந்தப் பயணத்தை கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 நாடுகள் வழியாக நடந்தே சென்று நிறைவு செய்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி தனது ஹஜ் பயணத்தைத் தொடங்கினார். கேரளாவில் இருந்து 8640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அவர் சென்றுள்ள சவுதி அரேபியாவின் மெதினா புனித தலம்.
இந்தப் பயணத்தை நடந்தே கடந்துள்ள ஷிஹாய் இதற்காக பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் வழியாகப் பயணித்து சவுதி அரேபியாவை அடைந்துள்ளார். மொத்தம் 370 நாட்கள் அவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
சவுதி அரேபியாவுக்குள் நுழைந்தவுடன் ஷிஹாப் முதலில் மெதினாவுக்குச் சென்றார். அங்கே 21 நாட்கள் தங்கியிருந்து ஆன்மிகக் கடமைகளை முடித்துக் கொண்டு அவர் மெக்கா புறப்பட்டார். மெதினாவில் இருந்து மெக்காவுக்கும் நடந்தே சென்றார். இரண்டு நகரங்களுக்கும் இடையேயான தூரம் 440 கிலோ மீட்டர். இதனை அவர் 9 நாட்கள் நடந்து சென்று கடந்தார். ஷிஹாபின் தாயார் ஜைனப் விமானம் மூலம் கேரளாவில் இருந்து மெக்காவுக்கு பயணிக்கவுள்ளார். அவரும் வந்தவுடன் மெக்கா புனித தலத்தில் ஷாஹிப் தனது கடமையை நிறைவேற்றுவார்.
யார் இந்த ஷிஹாப் சோட்டூர்? - நடந்தே மெக்கா, மெதினா சென்று சர்வதேச கவனம் பெற்றுள்ள ஷிஹாப் சோட்டூர் ஏற்கெனவே யூடியூப் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் கேரளாவில் அவர் சொந்த ஊரில் பிரபலமானவர் தான். இப்போது அந்த யூடியூபர் தனது ஹஜ் பயணம் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த 2022 ஜூன் 2ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய ஷிஹாப் முதலில் அடைந்தது இந்தியா - பாகிஸ்தானுக்கான வாகா எல்லை. ஆனால் அங்கு விசா பிரச்சினையால் அவரால் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை. 4 மாதங்கள் அங்கேயே ஒரு பள்ளியில் தங்கியிருந்த அவர் ட்ரான்ஸிட் விசா பெற்று பாகிஸ்தானுக்குள் சென்றார். பாகிஸ்தான் வழியாக பிப்ரவரி 2023ல் பயணத்தைத் தொடங்கினார். இப்போது அவர் இலக்கை அடைந்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT