Published : 09 Jun 2023 04:13 AM
Last Updated : 09 Jun 2023 04:13 AM
மதுரை: கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளாச்சேரியில் களிமண் சிலைகள் தயாரிப்பு பணியில் கைவினைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினைஞர்கள் குடும்பத்தினர் உள்ளனர். இங்கு மண் பாண்டங்கள் முதல் சுவாமி சிலைகள் வரை ஆண்டு முழுவதும் தயார் செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத களிமண், காகிதக்கூழ்களில் கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
வரும் செப்.18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண் டாடப்பட இருக்கிறது. அதையொட்டி முன்கூட்டியே ஆர்டர்கள் வந்துள்ளதால் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகளில் கைவினைக் கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மண்பாண்டக் கலைஞர் ரா.ஹரி கிருஷ்ணன் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு களிமண் சிலைகள் செய்ய வியா பாரிகள் அதிக அளவில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதையடுத்து விநாயகர் சிலைகள், கிருஷ்ணர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
குறைந்தது 3 இஞ்ச் உயரம் முதல் 15 இஞ்ச் உயரமுள்ள சிலைகளை அச்சில் வார்த்து தயாரிக்கிறோம். கை வேலைப்பாடாக 2 அடியிலிருந்து 7 அடி வரையிலான சிலைகளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக தயாரிக்க தொடங்குவோம். தற்போது வெயில் காலம் என்பதால் முன்கூட்டியே செய்யத் தொடங்கியுள்ளோம். அச்சு மூலம் பொம்மைகள் செய்து 2 நாள் நிழலில் உலர வைப்போம். பின்னர் சூளையில் வைத்து சுட்டு பிரித்தெடுப்போம்.
பின்னர் அதற்கேற்றவாறு வண்ணம் பூசி விற்பனைக்குக் கொண்டு செல்வோம். கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆர்டர்கள் வந்துள்ளன. மேலும் காதி நிலையங்கள், பூம்புகார் விற்பனை நிலையங்களிலும் கேட்டுள்ளனர். அதற்கடுத்து நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் என அடுத்தடுத்து வேலைகள் தொடர்வதால் ஆண்டு முழுவதும் வேலைகள் இருந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT