Last Updated : 05 Jun, 2023 06:33 AM

 

Published : 05 Jun 2023 06:33 AM
Last Updated : 05 Jun 2023 06:33 AM

சிவகங்கை | பழமையான பள்ளி கட்டிடத்தை நவீன அரங்கமாக மாற்றிய முன்னாள் மாணவர்கள்

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கூட்ட அரங்கு.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடியில் பழமையான பள்ளிக் கட்டிடத்தை நவீன கூட்டரங்கமாக முன்னாள் மாணவர்கள் மாற்றி உள்ளனர்.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி 1962-ல் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 650 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 27 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள பல கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருந்தன.

இந்நிலையில், இப்பள்ளியில் 1968-69-ம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 பேர் ஒன்று சேர்ந்து ஒரு கட்டிடத்தை புதுப்பித்து கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் வாட்ஸ்ஆப் குழுவை ஏற்படுத்தி ரூ.3 லட்சம் வரை நன்கொடை திரட்டினர். அந்தப் பணம் மூலம் பழமையான ஒரு கட்டிடத்தைப் புதுப்பித்து நவீன கூட்ட அரங்கமாக மாற்றியுள்ளனர். மேலும், அரங்கு முழுவதும் வண்ண மயமாக மாற்றப்பட்டுள்ளது.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கூட்டரங்கு திறப்பு
விழாவில்பங்கேற்ற முன்னாள் மாணவர்கள்.

இக்கட்டிடத்தை தலைமை ஆசிரியர் பிரிட்டோ தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து, ஊராட்சித் தலைவர் சுப்பையா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அருணாச்சலம் முன்னிலையில், முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியுமான மெய்யப்பன் திறந்து வைத்தார்.

இது குறித்து தலைமைஆசிரியர் பிரிட்டோ கூறியதாவது: பள்ளியில் மொத்தம் 13 கட்டிடங்கள் உள்ளன. இதில் நான் பொறுப்பேற்றதில் இருந்து 7 கட்டிடங்களைப் புதுப்பித்துள்ளோம். ஒரு கட்டிடத்தைச் சீரமைத்து நூலகமாக மாற்றினோம். அந்த நூலகத்தில் 40 மாணவர்கள் அமர்ந்து படிக்கலாம்.

படிப்படியாக ஒவ்வொரு கட்டிடமாகச் சீரமைத்து வருகிறோம். இதற்கு முன்னாள் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால், பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x