Published : 01 Jun 2023 04:16 AM
Last Updated : 01 Jun 2023 04:16 AM
புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாட்னா சென்றார். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த சதி திட்டத்தை முறியடித்தனர். அப்போது 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புடைய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுதொடர்பாக பிஹாரின் புல்வாரி ஷெரீப் காவல் நிலையத்தில் முதலில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பிஎஃப்ஐ அமைப்பினருக்கு இந்த சதி திட்டத்தில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சதி திட்டத்தை செயல்படுத்த ஒத்திகை நடந்ததாகவும், அதற்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவை பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த யாகூப்பிடம் வழங்கப்பட்டதும் தெரிந்தது. சதி திட்டத்தை நிறைவேற்ற இவர் பிஎஃப்ஐ அமைப்பினருக்கு பயிற்சி அளித்ததும் தெரியவந்தது. மேலும், பிஎஃப்ஐ அமைப்பினர் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணை யில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்தபிப்.4, 5-ம் தேதிகளில் பிஹாரின் மோதிஹரி பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சதி திட்டத்துக்கு ஆயுதங்களை ஏற்பாடு செய்ததாக2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்புஉடைய புட்டூர், பன்ட்வால் உள்ளிட்ட 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கர்நாடகாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் வளைகுடா நாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தசோதனை நடந்தது. இதேபோல, கேரளா, பிஹார் மாநிலங்களில் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் சோதனை: ஜம்மு காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் உள்ள 3 இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காஷ்மீர் போலீஸார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்தது. வழக்கு விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT