Published : 01 Jun 2023 06:11 AM
Last Updated : 01 Jun 2023 06:11 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமக்கூருவை அடுத்துள்ள கூதூர் கிராமத்தை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா (112). இவர் தனக்கு பிள்ளைகள் இல்லாததால் கூதூர் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன் சாலைஓரத்தில் ஆலமரக் கன்றுகளை நட்டார். பிறகு இவற்றை பிள்ளைகளை போல பத்திரமாக வளர்த்தார். இவ்வாறு 385 ஆலமரங்களை வளர்த்த திம்மக்காவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு திம்மக்காவின் பிறந்தநாளின் போது அவருக்கு, கர்நாடக முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவருக்கு அரசின் கார், ஓட்டுநர், வீடு, அமைச்சருக்கு இணையான ஊதியம், 2 உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சித்தராமையாவை சாலுமரத திம்மக்கா நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது சித்தராமையா, “எனது ஆட்சியிலும் உங்களுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து தொடர்ந்து வழங்கப்படும்” என்று கூறினார். இதையடுத்து இதற்கான உத்தரவை அவர் பிறப்பித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவின் சுற்றுச்சூழல் தூதுவராகவும் திம்மக்காவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT