Published : 31 May 2023 02:45 PM
Last Updated : 31 May 2023 02:45 PM
சங்காரெட்டி (தெலங்கானா): "உங்களுக்கு தைரியமிருந்தால் சீனாவின் மீது ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்துங்கள்" என்று பாஜகவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாவல் விடுத்துள்ளார். தெலங்கானாவின் பழைய நகரம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை தெரிவித்ததற்கு பதிலடியாக அசாதுதீன் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஹைதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பண்டி சஞ்சை, "பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ரோகிங்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாக்களர்களின் உதவியுடன் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். ஹைதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரோகிங்யா வாக்களர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நாம் அந்தப் பழைய நகரின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சங்காரெட்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை பேசிய ஒவைசி பண்டி சஞ்சையின் இந்தப் பேச்சைக் கூறிப்பிட்டார். அப்போது அவர், "பழைய நகரத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனாவின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துங்கள்" என்றார்.
மேலும், பிஆர்எஸ் தலைவர் கேசிஆருக்கும் தனக்கும் இணக்கம் இருப்பதாக விமர்சித்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, "என் கையில் ஸ்டியரிங் இருந்தால் உங்களுக்கு (அமித் ஷா) ஏன் வேதனையாக இருக்கிறது? கோடிக்கணக்கான பணம் கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஸ்டியரிங் என் கையில் இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இதில் அவருக்கு ஏன் வேதனை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகாவின் செவெல்லா (Chevella)வில் நடந்த பாஜகவின் சங்கல்ப் சபா வில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மஜ்லிஸ் (ஒவைசி) கைகளில் ஸடியரிங் வீல் இருக்கும் அரசாங்கம் தெலங்கானாவில் ஒருபோதும் இயங்க முடியாது. எங்களுக்கு மஜ்லிஸ் பார்த்து பயம் இல்லை. மஜ்லிஸ் உங்களுக்கு (பிஆர்எஸ்) முக்கியம், எங்களுக்கு இல்லை. தெலங்கானா அரசாங்கம் அங்குள்ள மக்களுக்காக இயங்க வேண்டும், ஒவைசிக்கா இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT