Published : 31 May 2023 10:21 AM
Last Updated : 31 May 2023 10:21 AM

சகாப்தம், வளர்ச்சி, சுற்றுச்சூழல், மனிதநேயம், சமூக நலன் ஆகியவற்றின் சங்கமம் மோடி: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கோப்புப்படம்

சகாப்தம், வளர்ச்சி, சுற்றுச்சூழல், மனிதநேயம், சமூக நலன் ஆகியவற்றின் சங்கமம் மோடி என முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால செயல்பாடு தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரை.

நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த மாற்றத்திற்கு நான் சாட்சியாக இருந்தேன். முதலில் ஒரு சாதாரண குடிமகனாக, பின்னர் ஆளுநராக, பின்னர் நாட்டின் குடியரசுத் தலைவராக, இப்போது ஒரு முன்னாள் குடியரசுத் தலைவராக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் அனைத்து மாற்றங்களையும் நான் மிக நெருக்கமாக அனுபவித்திருக்கிறேன். இதை நாட்டின் குடிமக்கள் அனைவரும் அனுபவித்து வருகின்றனர்.

மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளின் புரட்சிகரமான மாற்றங்களால் ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்துள்ளது. அதே நேரத்தில் பல நாடுகள் நமது வெற்றியைக் கண்டு, நம்மைப் பின்பற்றி வருகின்றன. கடந்த ஒன்பது ஆண்டுகள் "புதிய இந்தியா" உருவாக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், முக்கியமான உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் மதிப்பையும், வலிமையையும் காண்பது மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

உலகளாவிய பல தளங்களில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்புவதற்கும், மனிதாபிமான கொள்கைகளை மேம்படுத்துவதற்கும் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அமைதி மற்றும் ஒத்துழைப்பு, சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து முக்கியமான விஷயங்களிலும் இந்தியாவின் குரலுக்கு உலக அளவில் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இதனை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிஜி பயணத்தின்போது நாம் கண்டோம்.

இந்தியா பல்வேறு முக்கிய ஜி-20 கூட்டங்களை நடத்தும் விதம், சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. ஜி-20 கூட்டங்கள் இந்தியாவின் "ஒரே பாரதம் உன்னத பாரதம்" என்ற தத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. நமது ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், விவசாயிகள், கிராம மக்கள், தலித் மற்றும் பழங்குடி சமூகங்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த பயணம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது.

இன்று இந்தியாவின் பெண்கள் சக்தி, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. இந்திய இளைஞர்களின் திறமையை இன்று உலகம் அங்கீகரிக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், 48 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாமல் தவித்த சுமார் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 3 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் உள்பட 4 கோடி வீடுகள், சுமார் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பெண்களுக்கு 9.5 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல், 55 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான கிராமங்கள் வலுவான ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 10 கோடி விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதி வழங்கப்படுகிறது. 80 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்காகப் பல தசாப்தங்களாக காத்திருந்த மக்களுக்கு, இப்போது நரேந்திர மோடி அரசால் கிடைத்துள்ளன.

இன்று பல்வேறு அரசின் நலத்திட்டங்கள், நேரடி பணப்பரிமாற்று திட்டங்களின் மூலம், இடைத்தரகர்களின் வலையில் சிக்காமல் நேரடியாக பயனாளிகள் தங்கள் கணக்குகளில் பணத்தைப் பெற்று பயனடைகின்றனர். இந்த திட்டத்தால், இதுவரை ரூ. 27 லட்சம் கோடி மதிப்பிலான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த ஒன்பது ஆண்டுகளில், தனிநபர் வருமானம் மற்றும் நமது விவசாயிகளின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடி அரசு நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் உறுதியான சாலைகள் மூலம் இணைத்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், பல வரலாற்று தவறுகளை சரிசெய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி பல சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான போர் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் முத்தலாக் சாபத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், காலனித்துவ மனநிலையிலிருந்து இந்தியா விடுபடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ரேஸ் கோர்ஸ் சாலை இப்போது லோக் கல்யாண் மார்க், ராஜ பாதை இப்போது கடமைப் பாதை, தேசிய நினைவுச்சின்னம் இறுதியாக தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதே நேரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்டமான சிலை இப்போது வரலாற்று சிறப்புமிக்க இந்தியா கேட்டை அலங்கரிக்கிறது. உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமைச் சிலை, சர்தார் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை இந்தியா கொண்டாடுகிறது. நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால், நமது ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம், ஆங்கிலேயர் காலக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அவசியம் பல ஆண்டுகளாக உணரப்பட்டது. இதனை எம்.பி.யாக நானும் உணர்ந்துள்ளேன். இப்பிரச்சினை குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டாலும், எந்த அரசும் இந்த முக்கியமான தேசிய திட்டத்தை மேற்கொள்ள முன்வரவில்லை. முக்கியமான மற்றும் சவாலான இப்பணிகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல், நமது புதிய நாடாளுமன்ற கட்டிடம் சாதனை நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இந்த வரலாற்று தருணத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் சாட்சியாக இருந்து வருகிறது. இது நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். சுதந்திரத்தின் போது அதிகாரப் பரிமாற்றத்தின் சின்னமான "செங்கோல்" புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த பெருமையும், மரியாதையும் அளிக்கும் தருணமாகும்.

தனது ஒன்பது ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு பல சவால்களை நம் நாட்டிற்கான வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. கரோனா தொற்றுநோய் காலத்தில், தேசம் பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் உறுதியாக நின்று கொடிய நோய்த் தொற்றை தோற்கடித்த விதம் மிகவும் பாராட்டத்தக்கது. தொற்றுநோய், உலகளாவிய பொருளாதார மந்தநிலை, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றுக்கு இடையிலும், இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி தடையின்றி தொடர்ந்தது.

முந்தைய அரசுகளால் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட 400 க்கும் மேற்பட்ட திட்டங்கள், பல தசாப்தங்களாக முடிக்கப்படாமல் இருந்தன. பிரதமராக பதவியேற்ற உடனேயே, நரேந்திர மோடி இந்த தடைப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தார். மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் நரேந்திர மோடி அரசால் முடிக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளை மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கையின் ஆண்டாக நான் கருதுகிறேன், அதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகள் முன்னேற்றம், சுற்றுச்சூழல், மனிதநேயம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க சங்கமமாகும். இந்தக் காலகட்டம் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை வைத்துள்ளது. இது 2047 ஆம் ஆண்டில் நாம் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டை நிறைவு செய்யும் போது வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய உதவும். நம் தேசத்தின் சேவையில் நம்மையே அர்ப்பணித்து, இந்தியாவை விஸ்வகுரு என்னும் உயர்ந்த பீடத்தில் அமர்த்துவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x