Published : 30 May 2023 03:38 PM
Last Updated : 30 May 2023 03:38 PM
புதுடெல்லி: டெல்லியில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஷாஹிலை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் ஜோதி நயின் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் கடந்த 28-ஆம் தேதி இரவு பலரது முன்னிலையில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் ஷாஹில் என்பவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாஹர் பகுதியிலிருந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஷாஹில் ஏசி இயந்திரம் ரிப்பேர் செய்யும் பணி செய்பவர். இவர் டெல்லி ரோகிணியில் உள்ள ஷாபாத் மதர் டெய்ரி பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நிக்கி என்ற 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2021-ஆம் ஆண்டில் இருந்தே பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், சமீப நாட்களாக நிக்கி ஷாஹிலைவிட்டு விலகியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்திற்கு முதல் நாள் கூட அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். சம்பவத்தன்று நிக்கியை வழிமறித்த ஷாஹில் கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். நிக்கியின் உடலில் 20 கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. இந்தக் கொலை சிசிடிவி கேமராவில் பதிவாக அந்தக் காட்சிகள் வெளியாகி காண்போரை பதறவைத்துள்ளது.
போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஷாஹில் 15 நாட்களுக்கு முன்னரே கத்தியை வாங்கியதாகவும், காதலை நிக்கி புறக்கணித்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு: கொலையான சிறுமி நிக்கியின் குடும்பத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். முன்னதாக நேற்று கேஜ்ரிவால் இச்சம்பவம் தொடர்பாக பதிவு செய்த ட்வீட்டில், "சட்டம் ஒழுங்கு துணைநிலை ஆளுநரின் பிரச்சினை" என்று குறிப்பிட்டு விமர்சனத்துக்குள்ளானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT