Published : 30 May 2023 01:46 PM
Last Updated : 30 May 2023 01:46 PM
புனே: மணிப்பூரில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் இன்னும் சரியாகிவிடவில்லை என்றும், அங்கு நிலைமை சீராக சில காலம் ஆகலாம் என்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள சூழல் வன்முறையுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்று செல்லும் 144-வது பேட்ஜ்ஜின் அணிவகுப்பினை மதிப்பாய்வு செய்வதற்காக முப்படைத் தளபதி புனே சென்றிருந்தார். அப்போது மணிப்பூர் நிவலரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அனில் சவுகான், "கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பே மணிப்பூரில் ராணுவம், அசாம் ரைஃபில் படை நிலைநிறுத்தப்பட்டன. வடக்கு எல்லைகளில் சவால்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் ராணுவத்தினை நாம் திருப்ப அழைத்தோம். அங்கு வன்முறைச் சம்பவங்கள் குறையைத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனை நாம் செய்ய முடிந்தது.
மணிப்பூரில் இப்போதுள்ள சூழல் வன்முறையுடன் தொடர்புடையது இல்லை. அது இரண்டு இனக் குழுக்களுக்கு இடையேயான கிளர்ச்சி மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் நாங்கள் மாநில அரசுக்கு உதவுகிறோம்.
ராணுவமும், அசாம் ரைஃபில் படையும் மிகச் சிறப்பாக அங்கு பணியற்றி பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனாலும், சவால்கள் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை. நிலைமை சீராக சில காலம் எடுக்கும். இந்தப் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும் என்றும், மாநில அரசு சிஆர்பிஎஃப் உதவியுடன் இந்த வேலையைச் செய்யும் என்றும் நான் நம்புகிறேன்” என்றார்.
ராணுவ வீரர்களிடம் அவர் உரையாற்றும்போது, வடக்கு எல்லையில் சீனாவின் படைகள் நிலைநிறுத்தப்படுவதைக் குறித்துப் பேசினார். அப்போது அவர், "நாம் அனைவரும் ஐரோப்பாவில் நிகழும் போர், நாட்டின் வடக்கு எல்லையில் சீன ராணுவம் நிலைநிறுத்தப்படுவது, அண்டை நாடுகளில் நடக்கும் ஜியோபொலிடிக்கல் வார் போன்றவற்றைப் பார்த்து வருகிறோம். இவை அனைத்தும் இந்தியாவுக்கு தற்போது சவாலாக உள்ளன. ஆனால், இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும், நாட்டில் அமைதியைப் பேணுவதிலும் ராணுவம் உறுதியுடன் உள்ளது”என்று தெரிவித்தார்.
இதனிடையே, மணிப்பூரில் மே 3-ம் முதல் இதுவரை நடந்த இனக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT