Published : 30 May 2023 05:25 AM
Last Updated : 30 May 2023 05:25 AM
புதுடெல்லி: நீண்ட ஆண்டுகளுக்கு எந்தக் கூட்டணியும் நிலைத்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பாஜக மாநில முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: மாநிலங்களை ஆளும் பாஜக முதல்வர்களைக் காண்பதில் மகிழ்ச்சி. டெல்லியில் நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
ஆனால், மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு எப்போதுமே ஆதரவு அளித்து வருகின்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, அகாலி தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸின் அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை. அந்தக் கட்சிகளின் தலைவர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகி 25 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. எந்த ஒருகூட்டணியும் இத்தனை ஆண்டுகளுக்கு நீடித்ததில்லை. எனவே, கூட்டணிக் கட்சிகளுடன் இந்த விழாவை பாஜக கொண்டாட வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்களின் கருத்துகளை மாநில முதல்வர்கள் செவிமடுப்பது இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் எப்போதுமே எம்எல்ஏக்களின் கருத்துகளை மட்டுமே கேட்கின்றனர். எம்எல்ஏக்கள் எப்போதும் முதல்வருடன் நெருக்கமாக இருப்பதால் இவ்வாறு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால், கொள்கை உருவாக்கத்துக்கும், அதைச் செயலாற்று வதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம அளவில் பங்கேற்கிறார்கள் என்பதை மாநில முதல்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பாஜக மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே, பொதுச் செயலர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், பொதுச் செயலர் சுனில் பன்சால், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உ.பி. துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT