Published : 29 May 2023 12:28 PM
Last Updated : 29 May 2023 12:28 PM

கர்நாடகா அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: சித்தராமையாவுக்கு நிதித் துறை, சிவகுமார் வசம் நீர்ப்பாசனத் துறை

பெங்களூரு: கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்து இரண்டு நாட்களுக்கு பின்னர், அம்மாநில முதல்வர் சித்தராமையா அமைச்சர்களுக்கு இன்று (மே 29) இலாகாக்கள் ஒதுக்கீடு செய்துள்ளார். நிதித்துறை, தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், உளவுத்துறை, ஐடி,பிடி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தகலவல் தொடர்பு ஆகிய முக்கியத் துறைகளை முதல்வர் தன்வசம் வைத்துள்ளார்.

துணை முதல்வர் டி.சிவகுமாருக்கு, பிற முக்கியத் துறைகளான பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனம் ப்ருஹட் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) உள்ளடக்கிய பெங்களூரு நகர மேம்பாடு, பெங்களூரு நகர பிற குடிமை அமைப்புகள் போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு துறைகளும் மாநில பட்ஜெட்டில் மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளாகும்.

மூத்த அமைச்சர் ஜி. பரமேஸ்வராவுக்கு உளவுத் துறை தவிர்த்த உள்துறையும், ஹெச்.கே. பாட்டீலுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவாகரம், சட்டப்பேரவை மற்றும் சுற்றுலாதுறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழுமுறை எம்.பி.யாக இருந்தவரும் தற்போது அமைச்சராக இருக்கும் ஹெச்.கே.முனியப்பாவுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை, நுகர்வோர் விவகாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸின் வாக்குறுதிகளில் ஒன்றான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில் இந்தத்துறை முக்கிய பங்கு வகிக்கும்.

மற்றொரு மூத்த அமைச்சரான கே.ஜி.ஜார்ஜுக்கு எரிசக்தித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸின் மற்றொரு வாக்குறுதியான அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலசவ மின்சாரம் வழங்கும் பணி இந்தத்துறையின் கீழ் வருவதால் இந்தத்துறையும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

எட்டு முறை எம்எல்ஏவான தற்போது அமைச்சராக்கப்பட்டிருக்கும் ராமலிங்கரெட்டிக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தேர்தல் வாக்குறுதியான மாநிலத்தில் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கும் இந்தத் துறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

எம்.பி. பாட்டீலுக்கு பெரிய மற்றும் சிறு தொழில்துறையும், சதீஸ் ஜார்கிகோலிக்கு பொதுப்பணித்துறையும், என்.செலுவரயாசுவாமிக்கு விவசாயத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக அமைச்சராகியிருக்கும் மதுபங்காரப்பாவுக்கு ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வித்துறையும், எம்.சி.சுதாருக்கு உயர்கல்வித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்பட்டது போல, ஒரே பெண் அமைச்சரான லக்‌ஷ்மி ஹெப்பால்கருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் அதிகாரம் ஆகிய துறைகளை ஒதுக்கப்பட்டுள்ளன.

மூத்த அமைச்சர் ஹெச்.சி மகாதேவப்பாவுக்கு முக்கியத்துறையான சமூகநலத்துறை ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது. இத்துறைக்கு ஏழைகள் மற்றும் எஸ்சி, எஸ்டி வளர்ச்சிக்காக அதிக அளவில் நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும்.

தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையும், பிரியங்க் கார்கேவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா பைரகவுடாவுக்கு வருவாய்த்துறையும், பி.இசட் சமீர் அகமதுவுக்கு வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த மே 20ம் தேதி 8 அமைச்சர்களுடன், முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, ஒரு பெண் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x