Published : 28 May 2023 06:41 PM
Last Updated : 28 May 2023 06:41 PM
புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட முயன்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர். மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்தில் விவசாயிகளும் இணைந்து போராடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு அன்று அப்பகுதியில் போராட்டம் நடத்த இருப்பதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். இதற்கு ‘மஹிளா சம்மன் பஞ்சாயத்’ என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.
மல்யுத்த வீரர்களின் இந்த அறிவிப்பையடுத்து ஜந்தர் மந்தரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை சுற்றி இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே ஜந்தர் மந்தர் பகுதியில் போடப்பட்டிருந்த டென்ட் கொட்டகைகளையும் போலீசார் அகற்றினர்.
ஏற்கெனவே அறிவித்தபடி மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகே போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் ஏற்படுத்தி வைத்திருந்த இரும்பு பேரிகேடுகள் மற்றும் முள்வேலிகளை மீறி அவர்கள் அப்பகுதியில் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷ் மாலிக் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த கைது சம்பவத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ”முடிசூட்டு விழா முடிந்தது - ஆணவம் கொண்ட அரசர் வீதிகளில் பொதுமக்களை நசுக்குறார்” என்று பதிவிட்டுள்ளார்.
राज्याभिषेक पूरा हुआ - 'अहंकारी राजा' सड़कों पर कुचल रहा जनता की आवाज़! pic.twitter.com/9hbEoKZeZs
— Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT