Published : 28 May 2023 03:18 PM
Last Updated : 28 May 2023 03:18 PM
புதுடில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகவும், தற்சார்பு இந்தியாவின் விடியலுக்குச் சான்றாக திகழ்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை விவரம்: "புதிய நாடாளுமன்றக் கட்டிடம் புதிய இந்தியாவின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தின் சாட்சியாக இது திகழ்கிறது. இது வெறும் கட்டிடம் அல்ல. 140 கோடி மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் உள்ளடக்கியது. இந்தியா அசைக்க முடியாத உறுதியைக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இது உலகிற்குக் கொடுக்கிறது. இந்தியா முன்னேறும்போது, புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு மட்டுமல்ல; இது ஜனநாயகத்தின் தாய். தற்சார்பு இந்தியாவின் உதயத்தை புதிய நாடாளுமன்றம் பிரதிபளிக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மரியாதைக்குரிய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. சோழ சாம்ராஜ்யத்தில், கடமையின் பாதை, சேவையின் பாதை, தேசத்தின் பாதை ஆகியவற்றின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. நமது ஜனநாயகமே நமக்கு உத்வேகம் அளிக்கிறது. பழையதும், புதியதும் இணைந்து வாழ்ந்தற்கு புதிய நாடாளுமன்றக் கட்டிடமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் அளித்த வாழ்த்துச் செய்தியை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். இந்த விழாவில், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவெ கவுடா, மாநில முதல்வர்கள் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, யோகி ஆதித்யநாத், ஏக்நாத் ஷிண்டே, நெய்பு ரியோ, வெளிநாட்டு தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT