Published : 28 May 2023 10:08 AM
Last Updated : 28 May 2023 10:08 AM

நாடாளுமன்றத்தில் செங்கோல் | விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்ட விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் வலப்புறத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், "நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ்.

மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடை சூழ நம் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் நாடாளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்துள்ளேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் நாடாளுமன்றத்திற்குள் ஒலித்து இருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வைகொண்டது. அன்று பாடியது... நாடாளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது. யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவர் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது.

இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x