Published : 28 May 2023 04:15 AM
Last Updated : 28 May 2023 04:15 AM

இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கு அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். படம்: பிடிஐ

புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத் (உ.பி.), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.) மனோகர் லால் கட்டார் (ஹரியாணா) உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான பூபேஷ் பாகெல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர் சிங் சுகு (இமாச்சல பிரதேசம்) மற்றும் ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா) மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சுற்றுலா துறை மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடி உறுதி: இக்கூட்டத்தில், 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மாநில அரசுகளின் பிரச்சினைகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண நிதி ஆயோக் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கூட்டாட்சியை பலப்படுத்துவதற்காக ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ் (ஏடிபி) மற்றும் ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் புரோகிராம் (ஏபிபி) உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை நிதி ஆயோக் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்படுவதால் ஏற்படும் சக்தியை பிரதிபலிப்பதாக இந்த இரண்டு திட்டங்களும் அமைந்துள்ளன. எனவே, நிதி ஆயோக் அமைப்புடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

குறு, சிறு, நடுத்தர தொழில்கள்: மேலும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், மாநிலங்கள் இடையிலான உறவு, தூய்மை ஆகியவை குறித்தும் பிரதமர் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

10 முதல்வர் பங்கேற்கவில்லை: இதற்கிடையே, நிதி ஆயோக் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் (டெல்லி), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரசேகர ராவ் (தெலங்கானா), நவீன் பட்நாயக் (ஒடிசா), நிதிஷ்குமார் (பிஹார்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), மு.க.ஸ்டாலின் (தமிழகம்), பினராயி விஜயன் (கேரளா), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), சித்தராமையா (கர்நாடகா) ஆகிய 10 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், ‘மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை கேலிக்கூத்தாக்குகிறது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் என்ன பயன்’ என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்கூறும்போது, ‘‘ஊரக வளர்ச்சி துறைக்கு வழங்க வேண்டிய ரூ.3,600 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை’’ என்றார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்கம் சார்பில் மாநில நிதி அமைச்சர் பங்கேற்க முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார். இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உடல்நலக் குறைவால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. இதுபோல கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளதால் முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்கவில்லை. ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கான ஒட்டு
மொத்த நோக்கம், கட்டமைப்பு மற்றும் பயண வழியை தீர்மானிப்பதற்கான முக்கிய அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது. இக்கூட்டத்தில் சுமார் 100 விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், 10 மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்கவில்லை.

தங்கள் மாநிலங்களின் குரலை ஒலிக்க அவர்கள் தவறிவிட்டனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, பொறுப்பற்றது, மக்கள் விரோதமானது. பிரதமர் மோடியை எதிர்க்க உங்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்காக, உங்கள் மக்களுக்கு ஏன் தீங்கு விளைவிக்கிறீர்கள். கூட்டத்தை புறக்கணிக்கும் முதல்வர்களின் முடிவு முற்றிலும் பொறுப்பற்றது. மேலும், பொது நலனுக்கும் அவர்கள் ஆட்சி செய்யும் மாநில மக்களின் நலனுக்கும் எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x