Published : 27 May 2023 10:10 PM
Last Updated : 27 May 2023 10:10 PM
புதுடெல்லி: நாளை புதிய நாடாளுமன்றம் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். இந்தநிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.
பிரதமரின் இல்லத்தில் நடந்த விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் செங்கோலை பிரதமரிடம் வழங்கினார். மந்திரங்கள் முழங்க செங்கோல் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர். முன்னதாக, மதுரை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆகியோரிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். தொடர்ந்து ஆதீனங்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதனிடையே, புதிய பாராளுமன்றத்தின் மக்களவை அறையில் நாளை காலை 8:30 மணி முதல் 9 மணி வரை செங்கோல் நிறுவப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி பேச்சு: இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களாகிய உங்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான இடத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. உங்கள் 'சேவகரும்' எங்கள் அரசாங்கமும் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர்.
இந்தியாவின் மகத்தான பாரம்பரியத்தின் சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடமையின் பாதையில் நடக்க வேண்டும் என்பதையும் பொதுமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இந்த செங்கோல் இனி நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
இந்தியா எந்த அளவுக்கு ஒன்றுபட்டிருக்கிறதோ, அவ்வளவு வலுவாக இருக்கும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடைகளை உருவாக்குபவர்கள் பல்வேறு சவால்களை முன்வைப்பார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள் நமது ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பார்கள். ஆனால் உங்கள் அமைப்புகளுக்காக தேசம் பெறுகின்ற ஆன்மீகத்தின் பலம் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள எங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்"
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க இருக்கிறார். விழாவில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மிக முக்கிய அம்சமாக, நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக நடைபெற்ற செங்கோல் வழங்கும் நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்டு, அந்த செங்கோல், மக்களவை சபாநாயகரின் இருக்கையின் மேல் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்ட 19 ஆதீனகர்த்தர்கள் டெல்லி சென்றுள்ளனர். தனி விமானத்தில் டெல்லி சென்ற அவர்களுடன் பாரம்பரிய இசைக் கலைஞர்களும் சென்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT