Published : 27 May 2023 06:16 PM
Last Updated : 27 May 2023 06:16 PM
புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தலைநகரான புதுடெல்லி யூனியன் பிரதேசத்தின் காவல் துறை, சேவைத் துறை, நிலம் தொடர்பான அதிகாரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், சட்டப்படி காவல் துறை தவிர்த்த பிற அதிகாரங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச அரசுக்கே உண்டு என உத்தரவிட்டது. அதேநேரத்தில், அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு வர தனியாக சட்டம் இயற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, இதற்கேற்ப மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி உள்ளது.
இதையடுத்து, இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளின் ஆதரவை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரி வருகிறார். பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு வருகை தந்த அரவிந்த் கேஜ்ரிவால், முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து ஆதரவு கோரினார்.
இதையடுத்து மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், "புதுடெல்லி தொடர்பான அவசரச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும். இந்த விவகாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். மத்திய அரசு இயற்றி உள்ள அவசரச் சட்டம் டெல்லி மக்களை அவமதிக்கக்கூடியது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்திய அரசு தாங்களாகவே இந்த அவசரச் சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லாவிட்டால், நாங்கள் எங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இந்த அவசரச் சட்டத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தோற்கடிப்போம். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை துன்புறுத்தும் அணுகுமுறையை மத்திய அரசு பின்பற்றுகிறது. நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் வித்தியாசம் இல்லை" என குற்றம் சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT