Published : 27 May 2023 12:22 PM
Last Updated : 27 May 2023 12:22 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் தவறானது என்று ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளை (மே 28) நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க உள்ளார். குடியரசுத் தலைவர்தான் நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று கூறி, விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பு நாடு முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மூத்த தலைவரும் ஜனநாயக முற்போக்கு சுதந்திர கட்சியின் தலைவருமான, எதிர்க்கட்சிகளின் செயல் முற்றிலும் தவறானது என கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் டெல்லியில் இருந்தால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நிச்சயம் பங்கேற்பேன். புதிய நாடாளுமன்றம் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும். ஆனால், அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய நாடாளுமன்றம் கட்ட வேண்டிய தேவை என்ன என்று பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய நாடாளுமன்றத்திற்கு என்ன தேவை இருக்கிறது? ஏற்கனவே உள்ள கட்டிடம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதிகாரத்தில் இருப்பவர்கள் நாட்டின் வரலாற்றை மாற்றுவார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்திலோ அல்லது நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிலோ பங்கேற்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT